Home /News /virudhunagar /

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மினி திருமலை நாயக்கர் மஹால் தெரியுமா?- இத்தனை சிறப்பம்சங்களா?

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மினி திருமலை நாயக்கர் மஹால் தெரியுமா?- இத்தனை சிறப்பம்சங்களா?

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மினி திருமலை நாயக்கர் மஹால் இந்திய தொல்லியல்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Srivilliputhur
    மதுரையில் பிற்காலபாண்டியர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஏராளமான செல்வங்களும், தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களும் தில்லி சுல்தான்களால் சூரையாடப்பட்டன. அதன் பின்னர் வந்த நாயக்கர் ஆட்சி காலத்தில் தான், அவையெல்லாம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டன. குறிப்பாக கட்டிடக்கலை. நாயக்கர்கள் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினர்.

    நாயக்கர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திருமலை நாயக்கர் மஹாலை கூறலாம். ஏராளமான பிரமாண்ட ராட்சத தூண்களுடன் கம்பிரமாய் காட்சியளிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு வியந்து செல்கின்றனர். ஆனால் நாம் பார்க்க வேண்டிய இன்னொரு மினி திருமலை நாயக்கர் மஹால் நமக்கு அருகில் நம் திருவில்லிபுத்தூரில் உள்ளது.

    திருமலை நாயக்கர் மஹால்


    ஆண்டாள் கோவிலை ஒட்டிய தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. 1623 முதல் 1659 காலகட்டத்தில் கட்டப்பட்ட குட்டி திருமலை நாயக்கர் மஹால். நாயக்க மன்னர்களில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும்போது ஓய்வெடுக்க இங்கு மதுரை திருமலை நாயக்கர் மஹால் போன்று ஒரு அரண்மனையை இங்கு கட்டியுள்ளார். அரண்மனையின் ஒரு பகுதி மன்னர் ஓய்வெடுக்கும் அறையாகவும் மற்றொரு பகுதி தர்பாராகவும் இருந்துள்ளது.

    திருமலை நாயக்கர் மஹால்


    நாயக்கர்களுக்கு பின்னர் முகலாயர்கள் இப்பகுதியை கைப்பற்றி அரண்மனையை மேல்முறையீட்டு நீதிமன்றமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    திருமலை நாயக்கர் மஹால்


    பின் பிரிட்டிஷ் அரசு காலத்தில் விக்டோரியா மகாராணியின் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாக அரண்மனையை புதுப்பித்து மேற்கு பகுதியை நீதிமன்றமாகவும், கிழக்கு பகுதியை தாலுகா அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்துனர்.

    திருமலை நாயக்கர் மஹால்


    இந்திய தொல்லியல் துறை இதனை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது. அதன் பின்னரும் நீதிமன்றமும், தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வந்தது‌. பின்னர் ‌தாலுகா அலுவலகமும், நீதிமன்றமும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அரண்மனை இந்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

    அமைப்பு :

    மொத்தம் இரண்டு பகுதிகளாக உள்ள‌ இந்த அரண்மனை, செங்கல்கள் மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மன்னர் தங்கும் இடம் செவ்வக வடிவில் எட்டு வளைவுகளுடன் வண்ண பூக்கள் ஓவிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. வெளி முற்றத்தில் காணப்படும் பிரமாண்ட தூண்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டவை.

    திருமலை நாயக்கர் மஹால்


    முதல் உலக போர் சமயத்தில் இவ்வூரை சேர்ந்த 52 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் நினைவாக பிரிட்டிஷ் அரசாங்கம் வெளிப்புறத்தில் நினைவு கல்வெட்டு ஒன்றை வைத்துள்ளது. அரண்மனை இந்திய தொல்லியல் துறை வசம் வந்த பின்னர் நாயக்கர் வரலாறு பற்றிய பொருள் விளக்கப் படங்கள் தொங்கவிடப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருமலை நாயக்கர் மஹால்


    நுழைவுக்கட்டணமாக இந்தியர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டவர்க்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அரண்மனையில் உள்ள பொருள் விளக்க படங்கள் மூலம் நாயக்க மன்னர்களின் வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்டாள் கோவிலுக்கு மிக அருகில் இருப்பதால் கோவிலுக்கு வருபவர்கள் இந்த மினி திருமலை நாயக்கர் மஹாலையும் பார்த்து விட்டு செல்லாம்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி