Home /News /virudhunagar /

கட்டப்பொம்மனுக்கு தூக்கு; பாளையக்காரர்களுக்கு எச்சரிக்கை- விருதுநகரில் இன்றும் காணப்படும் ஆங்கிலேயர் கால பட்டயம்

கட்டப்பொம்மனுக்கு தூக்கு; பாளையக்காரர்களுக்கு எச்சரிக்கை- விருதுநகரில் இன்றும் காணப்படும் ஆங்கிலேயர் கால பட்டயம்

ஆங்கிலேயர் கால பட்டயம்

ஆங்கிலேயர் கால பட்டயம்

ஆங்கிலேயர் காலத்து பட்டயம் இன்றும் விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நவீன மக்களாட்சி காலத்தில் அரசு, எந்த அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதை அரசாணையாகவும், செய்தி நாளிதழ்களில் விளம்பரமாகவும் வெளியிடுவது வழக்கம். இதற்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் சரி, மன்னராட்சி காலத்திலும் சரி அறிவிப்புகளை தண்டோரா போட்டு தான் அறிவிப்பு செய்வர்.

    ஆனாலும் ஒருசில நேரங்களில் ஆங்கிலேயர்கள் அறிவிப்பு நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அறிவிப்பு வெளியிட செப்பு பட்டயங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதற்கு சான்றாய் விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் ஊர்நடுவே அடித்து வைக்கப்பட்ட செப்பு பட்டயத்தால் ஆன அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. பாவாலி கிராமம் விருதுநகருக்கு மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    தாமிர பட்டயம் குறித்த தமிழக அரசின் கல்வெட்டு


    தற்போது மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த கிராமம் 200 ஆண்டுகளுக்கு முன்பு பாளையக்காரர்கள் ஆட்சி காலத்தில் பாளையமாக விளங்கியது. இங்கு காணப்படும் செப்பு பட்டத்தின் அகலம் 52 செ.மீ உயரம் 31 செ.மீ. இதை பற்றி அறிந்து கொள்ள நாம் காலம் கடந்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய பக்கங்களை பார்க்க வேண்டியுள்ளது.

    ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பட்டயம்


    1785ல் ஆற்காடு நாவாப் ஆங்கிலேயருக்கு வரி கட்டும் உரிமையை திரும்ப பெற்றார். தெற்கு சீமையிலாவது வரி வசூலிக்கும் உரிமையை தங்களிடம் தருமாறு ஆங்கிலேயர்கள் நாவாப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.

    தாமிர பட்டயம்


    ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. இதனால் 1790ல் ஆங்கிலேயர்கள் அவர்களாகவே தெற்கு சீமை பகுதிகளில் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றுக்கொண்டதாய் அறிவித்தனர். இதற்கு ஆதரவாக நவாப்பின் மீது அதிருப்தியிலிருக்கும் தெற்கு சீமை படைவீரர்களும் சேர்ந்து கொண்டதால் வேறுவழியின்றி நவாப் 1792 ஆங்கிலேயர்களுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

    அதன்படி ஆங்கிலேயருக்கு தெற்கு பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டது. வரி வசூல் செய்து செலவு போக மீதி பணத்தை நவாப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. தெற்கு பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் முதலில் பாளையக்காரர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க நினைத்தனர்.

    இதனால் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் தொடக்கம் முதலே பகை நிலவி வந்தது. இறுதியில் கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு அனைத்து பாளையக்காரர்களுக்கும், மக்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனி மீது பயம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ மேஜர் அலெக்சாண்டர் பானர்மேன்.

    கிழக்கிந்திய கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு இனி இது தான் கதியென்று எச்சரிக்கும் தொனியில் செப்பு பட்டயம் ஒன்றை அனைத்து பாளையங்களிலும், ஊர் மத்தியில் மக்கள் பார்வைக்கு வைக்கும்படி ஆணை பிறப்பித்தார். அதன் படி அனைத்து பகுதிகளிலும் செப்பு பட்டயம் வைக்கப்பட்டது.

    தற்போதும் பாவாலி கிராமம் பக்கம் சென்றால் மாட்டு தொழுவத்திற்கு அருகில் பராமரிப்பு இன்றி இந்த செப்பு பட்டயம் காணப்படுவதை காணலாம். பட்டயத்தில் எழுத்துக்கள் ஆழமாக பொறிக்கப்பட்டுள்ளதால் இன்றும் அதை தெளிவாக படிக்க முடிகிறது. பட்டயத்தில் எழுதப்பட்டுள்ளது என்னவென்றால், ஆங்கிலேயர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தராமல் இடையூறு செய்து வந்த பாஞ்சாலங்குறிச்சி, ஏழாயிரம் பண்ணை, நாகலாபுரம், கொல்லம்பட்டி, காடல்குடி, குளத்தூர் ஆகிய ஜமீன்தார்களின் பாளையங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், கட்டபொம்மன் மற்றும் அவரது தளபதி சிவசுப்பிரமணி பிள்ளை, நாகலாபுரம் ஜமீன்தார் தம்பி செளந்தர பாண்டியன் ஆகியோர் உயிரோடு தூக்கிலிடப்பட்டதாகவும், இனி எந்த ஒரு பாளையக்காரரும் கோட்டை, படைப்பிரிவு, ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது.

    மீறி செயல்பட்டால் பாளையங்கள் பறிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். குடிமக்கள் எவரேனும் ஆயுதங்களை பதுக்கி இருந்தாலும் பாளையக்காரர்களே பொறுப்பு. அவர்களே தண்டனை பெறுவர் என்றும், இதை மீறி செயல்பட்டால் அவர்களின் உயிர்சேதம் ஏற்படும். பாளையம் தட்டப்படும் என மிரட்டும் தொனியில் எழுதப்பட்டுள்ளது.

    இப்பட்டயம் மூலம் இந்த பாவாலி கிராமம் பாளையத்தில் தலைமைப்பகுதி என உறுதி செய்ய முடிகிறது. ஆனால் இப்பகுதி எந்த பாளையக்காரர் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது என்று இதுவரை தெரியவில்லை.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி