Home /News /virudhunagar /

இது வைப்பாரு நதிக்கரை நாகரீகம்: சாத்தூரில் அகழாய்வில் கிடைத்த பழங்காலப் பொருள்கள்

இது வைப்பாரு நதிக்கரை நாகரீகம்: சாத்தூரில் அகழாய்வில் கிடைத்த பழங்காலப் பொருள்கள்

சாத்தூர் அகழாய்வு

சாத்தூர் அகழாய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் பல அரிய பொருள்கள் கிடைத்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sattur, India
    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் கிடைக்கும் தொல்பொருட்கள் நம் தொன்மையை எடுத்துரைத்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. மதுரைக்கு அருகில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுகள் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
    தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    முன்னதாக வெம்பக்கோட்டை பகுதிக்கு அருகில் மேட்டுக்காடு பகுதியில் பண்டைய கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன.

    அகழாய்வில் கிடைத்த மண்பாண்டம்


     

    சரியாக வைப்பாற்றில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில், சமதளத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ள இப்பகுதியின் மேற்பரப்பில் இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

    அகழாய்வு குழி


    இதனை வைத்தே இந்நதிக்கரை பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என யூகிக்க முடிகிறது. இப்பகுதியை கள ஆய்வு செய்த போது இதன் மேற்பகுதியில் 1.7 மீட்டர் விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

    அகழாய்வு களம்


    இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வெம்பக்கோட்டை உட்பட 7 இடங்களில் அகழாய்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் இங்கு தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்


    இது குறித்து வெம்பக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு வரும் குழு இயக்குநர் பாஸ்கர் கூறியதாவது, ’இப்பணிகள் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெரும். இதுவரை கண்ணாடி மணி, கல்மணி, சங்கு மணி, சங்கு வளையல்கள், சுடுமண் மணி, சுடுமண் பொம்மைகள் மற்றும் விலங்கு உருவங்கள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன என்றார்.

    பழங்கால கல்வெட்டுகளில் காணப்படும் "இருஞ்சோ நாட்டு சாத்தனூர்" என்ற இன்றைய சாத்தூர் பகுதியானது பல தொன்மை சிறப்புகளை உடையது. இப்பகுதியில் கிடைத்த தொல்லியல் மேடுகள், கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள் மூலம் இதை உறுதி செய்யலாம். தற்போது வைப்பாற்று பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுகள் மூலம் மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என நம்புகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி