Home /News /viluppuram /

கள்ளச்சந்தையில் மது விற்பதில் தகராறு - கூலிப்படையை ஏவி பார் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்

கள்ளச்சந்தையில் மது விற்பதில் தகராறு - கூலிப்படையை ஏவி பார் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்

பாதிக்கப்பட்டவர்

பாதிக்கப்பட்டவர்

குற்றவாளிகள் ராஜாராம் பாரில் அமர்ந்து மது அருந்திவிட்டு சென்றதாகவும் அப்போது கூகுள் பே மூலம் 400 ரூபாய் பணம் அனுப்பிய தகவலையும் ராஜாராம் கூறிய தகவல் மூலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் தொழில் போட்டி காரணமாக பார் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கூகுள் பே மூலம் போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(40). இவர் மேல்மலையனூர்- வளத்தி சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (எண் 11641) அருகே கடந்த மூன்று மாதமாக பார் நடத்தி வருகிறார். இந்த அரசு மதுபான கடை அருகே கடந்த 8 ஆண்டுகளாக மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த செல்வம் (36) என்பவரும் தனக்கு சொந்தமான இடத்தில் பார் நடத்தி வந்துள்ளார்.

    அரசின் உரிய அனுமதி இல்லாமல் மதுபானக் கடைக்கு அருகே செயல்பட்டு வரும் இந்த 2 பார்களில் கள்ள சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்வதிலும் தண்ணீர் பாட்டில், வாட்டர் கிளாஸ் மற்றும் ஊறுகாய்-மிச்சர் பொட்டலங்கள் விற்பனை செய்வதில் செல்வத்திற்கும் ராஜாராமிற்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மேல்மலையனூர் அருகே தனது நண்பர் அமீத் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜாராமை 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கைப்பகுதியில் வெட்டி கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

    தலையில் 10 தையல்களும் கைப்பகுதியில் இரண்டு தையல்களும் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ALSO READ | கடிதம் எழுதிவைத்து பிரபல நடிகை தற்கொலை.. டைரக்டருடன் காதலா ? - போலீஸ் விசாரணை

    பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பார் உரிமையாளர் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை முயற்சி தொடர்பாக வளத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேல்மலையனூர் பகுதியில் கடை ஒன்றில் பதிவாகி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவான நிலையில் அவற்றை பாதிக்கப்பட்ட ராஜாராமிடம் காட்டிய போது அவரும் குற்றவாளிகளை உறுதிப்படுத்தினார். மேலும் குற்றவாளிகள் ராஜாராம் பாரில் அமர்ந்து மது அருந்திவிட்டு சென்றதாகவும் அப்போது கூகுள் பே மூலம் 400 ரூபாய் பணம் அனுப்பிய தகவலையும் ராஜாராம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் பார் நடத்திவரும் செல்வம் மீதும் சந்தேகம் இருப்பதாக ராஜாராம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் காவல்துறையினருக்கு துப்பு துலங்கிய நிலையில் கூகுள் பே மூலம் பணம் அனுப்பப்பட்ட செல்போன் நம்பரையும் சந்தேகிக்கப்பட்ட செல்வம் செல்போன் நம்பரையும் போலீசார் கண்காணித்து, குற்றவாளிகளுக்கும் சந்தேகிக்கப்பட்ட செல்வத்திற்கும் தொடர்பு இருந்ததும் கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையினர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் கண்டறிந்தனர்.

    இதனிடையே புதுச்சேரிக்கு விரைந்த தனிப்படை காவலர்கள் கூலிப்படைக்கு தலைவனாக செயல்பட்ட சின்னகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த கௌதமன் (27), பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த மணி(21), பெரியகாலாப்பட்டு தாமஸ் ஆல்வா எடிசன் (22) மற்றும் அரும்பாதாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த போது மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த விலை உயர்ந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    ALSO READ | வர்ம முறையில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது! செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?

    விசாரணையில், கடத்த 3 மாதங்களாக தொழில் பாதிக்கப்பட்டதால், ராஜாராமை கொலை செய்ய திட்டம் தீட்டிய செல்வம், கௌதமிடம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ஒப்பு கொண்டுள்ளார். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த குற்றவாளிகள் 4 பேர் மற்றும் பார் நடத்தி வரும் செல்வத்தையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: குணாநிதி, விழுப்புரம்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Attempt murder case, Crime News, Villupuram

    அடுத்த செய்தி