ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

கை இல்லை என்றால் தன்னம்பிக்'கை' இருக்கே.. கால்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண்!

கை இல்லை என்றால் தன்னம்பிக்'கை' இருக்கே.. கால்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண்!

விழுப்புரம் மாற்றுத்திறனாளி பெண்

விழுப்புரம் மாற்றுத்திறனாளி பெண்

பிறக்கும்போதே இரு கைகளை இழந்த பெண், வாழ்கையில் தன்நம்பிக்கை என்னும் கைகளை பற்றி, கால்களால் தேர்வெழுதி பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Viluppuram | Viluppuram

  விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகே உள்ள  குக்கிராமமான ஆற்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் அண்ணாமலை, பழனியம்மாள் தம்பதிக்கு 5 மகள்கள். இதில் மூத்த மகளாக பிறந்த வித்யாஸ்ரீக்கு பிறக்கும் போதே இரு கைகளும் இல்லை. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, பழனியம்மாள் தம்பதி இரு கைகளும் இல்லாத பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது எனக் கூறி புறம் தள்ளிவிட்டனர்.

  பெற்றோரால் புறந்தள்ளப்பட்ட அந்த இரு கைகள் இல்லாத பச்சிளங் குழந்தையான வித்யாஸ்ரீயை அவரது பாட்டியான வீரம்மாள் எடுத்து வளர்த்தார். வித்யாஸ்ரீ வளர, வளர இரு கைகள் இல்லாவிட்டால் என்ன இருக் கால்கள் இருக்கிறதே எனக் கூறி வித்யாஸ்ரீக்கு கைகளால் செய்ய கூடிய அனைத்து விதமான பணிகளையும் இரு கால்களை கொண்டு செய்வதற்கான பயிற்சியை பாட்டி வீரம்மாள் வழங்கினார்.

  கால்களைக் கொண்டு எழுத பயிற்சி வழங்கியது மட்டுமின்றி காலையில் எழுந்ததும் பல் துலக்குவதில் இருந்து குளிப்பது, முகத்திற்கு பவுடர் பூசி, பொட்டு வைப்பது முதற்கொண்டு சாப்பிடுவது, தண்ணீர் எடுத்து குடிப்பது, பாத்திரம் விளக்குவது, துணி துவைப்பது, சமையல் செய்வது என தன் வேலைகளுக்காக பிறரை எதிர்பார்த்து காத்திராமல் இரு கால்களைக் கொண்டு தன் வேலைகள் அனைத்தையும் தானே செய்து கொள்ள வேண்டும் என ஊக்கமளித்து மனம் தளராமல் பாட்டி வீரம்மாள் அளித்த பயிற்சி வித்யாஸ்ரீயை இன்று ஆசிரிய பட்டதாரி பெண்ணாக்கியுள்ளது.

  இதையும் படிங்க | என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம்.? அரசு விதியைச் சொல்லி விளக்கம் அளித்த அமைச்சர்!

  தற்போதும் வித்யாஸ்ரீ, தனது அன்றாட வேலைகளை தனது கால்களைக் கொண்டே செய்து கொள்கிறார். எழுதுவது, ஓவியம் வரைவது, முகத்திற்கு பவுடர் பூசி, பொட்டு வைத்து கொள்வது, பாத்திரம் துலக்குவது, சாப்பிடுவது, செல்போன் அழைப்புகளை எடுத்து பேசுவது, செல்போன் டயல் செய்வது என கைகளால் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் சர்வ சாதாரணமாக தனது கால்களாலேயே செய்து கொள்கிறார்.

  சின்னஞ்சிறிய வயதில் இரு கைகள் இல்லாத வித்யாஸ்ரீயை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டனர். அப்போது அரசு பள்ளி ஆசிரியர்களுடன் சண்டையிட்டு வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க பாட்டி வீரம்மாள் எடுத்து வைத்த முயற்சி காரணமாகவும், வித்யாஸ்ரீயின் விடா முயற்சி, தன்னம்பிக்கை காரணமாகவும் இன்று பிஏ முடித்து பிறகு எம்.ஏ ஆங்கிலம் முடித்து அதன்பிறகு பிஎட் ஆசிரியர் பட்டப் படிப்பையும் வித்யாஸ்ரீ நிறைவு செய்து தற்போது ஆசிரியர் பணியில் சேருவதற்கான தேர்வில் பங்கேற்க படித்து வருகிறார்.

  பள்ளி படிப்பின் போது மட்டுமல்லாமல் கல்லூரி படிப்பின் போதும் தனக்காக தேர்வு எழுத நியமிக்கப்பட்ட உதவியாளர்களை வேண்டாம் எனக் கூறி விட்டு தன் கால்களை கொண்டே தேர்வுகளை எழுதி ஆசிரிய பட்டதாரியாக வித்யாஸ்ரீ சாதனைப் படைத்துள்ளார்.

  படிப்பில் மட்டுமின்றி ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் என பன்முக திறமைகளை வளர்த்து கொண்டுள்ளார். தனது கிராமத்தில் உள்ள அக்கம், பக்கத்து வீட்டாரின் ஏழை பிள்ளைகளுக்கு தனது வீட்டின் மாடியிலேயே இலவசமாக வித்யாஸ்ரீ டியூஷன் எடுத்து கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.

  இரு கைகள் இல்லாவிட்டாலும் கால்களால் எழுதி சாதனை படைத்து வரும் வித்யாஸ்ரீக்கு புதிய பார்வை அமைப்பு, தமிழ் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்துள்ளது.

  தனக்கு இரு கைகளும் இல்லையே என்று சோர்ந்துவிடாமல் தன்னம்பிக் ”கை” யுடன் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் வித்யாஸ்ரீ தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார். வயதான தந்தை விவசாய கூலி வேலைக்கு சென்று ஈட்டி வரும் வருமானம், வீட்டிலேயே வைத்திருக்கும் பெட்டிக் கடையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே வித்யாஸ்ரீயின் குடும்பம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறது.

  இரு கைகள் இல்லாத நிலையை போக்கி கொள்ள முடிந்த தன்னால் தன் குடும்பத்தில் நிலவும் ஏழ்மை நிலையை போக்க முடியவில்லையே என வருந்தும் வித்யாஸ்ரீக்கு, ஆசிரியராகி மாணவ சமுதயாத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே லட்சியம். எனவே, தமிழக அரசு சிறப்பு சலுகை அளித்து தனக்கு ஆசிரியர் பணி வழங்கி இத்தனை ஆண்டுக் காலம் தன்னம்பிக்கையுடன் போராடி வரும் தனது லட்சிய போராட்டத்திற்கு வெற்றி கிடைக்க உதவிட வேண்டும் என மாற்றுத்திறனாளி இளம்பெண் வித்யாஸ்ரீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Record, Viluppuram S22p13