முகப்பு /செய்தி /விழுப்புரம் / 8 வகையான 41000 மனநல மாத்திரைகள்.. போலி சீல்கள்.. சிபிசிஐடியை அதிர வைத்த விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம்!

8 வகையான 41000 மனநல மாத்திரைகள்.. போலி சீல்கள்.. சிபிசிஐடியை அதிர வைத்த விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம்!

அன்பு ஜோதி ஆசிரமம்

அன்பு ஜோதி ஆசிரமம்

அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாக தகவல்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன நபர் கர்நாடகாவில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி அதே அடையாளங்களுடன் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். அங்கு, திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது அம்பலமானது. இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அறைகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச் செயல்கள் விசாரணையில் தெரியவந்தன. மேலும் ஆசிரமத்திலிருந்து இதுவரை 16 பேர் காணாமல் போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்ரமத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி ஆசிரமம் நடத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமவாசிகளை வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர், ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரம பணியாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியானது. அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் எட்டு வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடத்தது என்பது தெரியவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

மேலும் தமிழ்நாடு, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட் மற்றும் சீல்களை பயன்படுத்தி ஆசிரமவாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமின்றி அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, ஆசிரமத்திலிருந்து தப்பிய ஜெபருல்லாவின் அடையாளத்தில் ஆண் சடலம் பெங்களூரூவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஜெபருல்லாவின் உறவினர்கள் ஒத்துழைத்தால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியந்துள்ளது. மேலும் சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடமும் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

First published:

Tags: CBCID Police, Chargesheet, Villupuram