விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே சர்ச்சைக்குள்ளான ஆசிரமத்தை மூடி சீல் வைக்கப்படவுள்ள நிலையில் மாவட்ட முழுவதும் உள்ள காப்பகங்கள் உரிய முறையில் இயங்குகிறதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் காணாமல் போயுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும், வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கி வந்ததும், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உரிய முறையில் பரமாரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 16 பேரை காணவில்லை என்றும் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டதுடன் சர்ச்சைக்குள்ளான அன்பு ஜோதி ஆசிரமம் முழுவதும் கடந்த 11ஆம் தேதி விக்கிரவாண்டி வருவாய் துறை அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி ஆசிரமம் நடத்தியது தெரிய வந்தது. மேலும் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியதும் மனநலம் குன்றியோர் ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரம பணியாளர்கள் 4 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 2 பேரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 109 ஆண்கள், 33 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை அருகில் உள்ள வேறு காப்பகங்களுக்கு மாற்றவும், விரும்புவோரை பெற்றோருடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள ஆசிரமம் மற்றும் காப்பகங்கள் உரிய அனுமதி பெற்று முறையாக செயல்பட்டு வருகிறதா விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: குணநிதி ஆனந்தன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram