ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சாதி உணர்வை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தனக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை கல்லூரிகள் சாதி பாகுபாடு குறித்தே வருகிறது எனவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
விழுப்புரத்தில் மணற்கேணி பதிப்பகம் சார்பில் சமத்துவ ஆசிரியர்களுக்கான நிகரி விருது வழங்கும் நிகழ்ச்சி கலைஞர் அறிவாலையத்தில் நடைபெற்றது. மணற்கேணி பதிப்பதை நடத்தும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துக்கொண்டு சமத்துவ ஆசிரியர்கள் விருதுகளை வழங்கினார்.
இதில் விழுப்புரம் விராட்டிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் தமிழரசி சற்குணம், சென்னாகுணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அருணகிரி, சென்னை தியாகராயா கல்லூரி பேராசிரியர் செங்கொடி, திருக்கோயிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் ஆகியோருக்கு சமத்துவ ஆசிரியர்களுக்கான விருதும் பணமுடிப்பும் புத்தகங்களும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “இன்றைக்குள்ள ஆளுநர் தமிழநாட்டில் உள்ள உயர்க்கல்வியை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். உயர்க்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை இந்தியாவின் சாரசரியை விட தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த மாநிலத்தை பார்த்துதான் திராவிட ஆட்சி காலத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டதாக ஆளுநர் கூறுகிறார்.
அது அவரின் அறியாமை வெளிப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மையாக இருப்பதாக இந்தியா டுடே விருது வழங்கி பாராட்டியுள்ளது. உயர்க்கல்வி நிறுவனங்களில் ஆளுநர், தங்களுக்கு வேண்டியவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கிறார். பட்டியலில் பின் தங்கியவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆளுநர் நேர்மையானவராக இருந்தால் பட்டியலை வெளியிட தயாரா?
இதனையடுத்து நிகழ்ச்சியில் விருது வழங்கி உரையாற்றிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இன்றைக்கும் பள்ளிகளில் சாதிய பிரச்சனை உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி, கோயில்களில் நுழைய முடியாத நிலை இருந்தது. இதனை மாற்றியவர்கள்தான் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர். ஒரு சில இடங்களில் உள்ள சாதிய பிரச்சனைகளை தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கடந்த காலங்களில் இந்த சூழல் தற்போது இல்லை. அது தான் திராவிட மாடல் ஆட்சி.
ஆசிரியர்கள் சிலர் சாதிய உணவர்வை வளர்க்கிறார்கள். ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் மாணவர்களிடையே சாதி வெறியை ஊட்டி சண்டையை வளர்க்ககூடாது. எனக்கும் வரும் பெரும்பாலான புகார்கள், கல்லூரிகளில் சாதிய பாகுபாடு இருப்பதாகதான் வருகிறது. அவற்றை எல்லா சரி செய்து நாம் தமிழர்கள், நாம் மனிதர்கள் என்ற எண்ணம் வளர வேண்டும்” என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Caste, Minister Ponmudi, Teachers