முகப்பு /செய்தி /விழுப்புரம் / சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனை.. 2 நாட்களில் 11 சிலைகள் மீட்பு!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனை.. 2 நாட்களில் 11 சிலைகள் மீட்பு!

சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய சிலைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றிய சிலைகள்

லாரா ரெட்டி என்பவரிடம் ஒரு சிவகாமி உலோக சிலை, ஆஞ்சநேயர், நாகதேவதை, சிவன் கற்சிலைகள் என 4 சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் பகுதியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 2 வேறு இடங்களில் இருந்து 11 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் அமைந்துள்ள மெட்டல் கிராப்ட்ஸ் (METAL CRAFTS) என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், திருடப்பட்ட பழங்கால உலோகச் சிலைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி மெட்டல் கிராப்ட்ஸ் கடை உரிமையாளர் டி.ஆர்.கன்ணியனின் மகன் டி.ஆர்.ராமச்சந்திரன் (42) என்பவரின் வளாகத்தில் நடந்த சோதனையில், அர்த்தநாரீஸ்வரர் சிலை இருப்பதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறிய ஆவணத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.

இதனையடுத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியபோது, கடைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த  7 பழங்கால சிலைகள் கண்டறியப்பட்டன.

அங்கு கிடைத்த 116 செ.மீ , 60 செ.மீ உயரமுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை, 60 செ.மீ உயரமுள்ள உடைந்த கைகளோடு கூடிய அர்த்தநாரீஸ்வரர் சிலை, 126 செ.மீ உயரமுள்ள சிவகாமி தேவியின் வெண்கல சிலை, 122 செ.மீ உயரமுள்ள கிருஷ்ணர் சிலை, 22 செ.மீ உயரம் உள்ள புத்தர் சிலை, 34 செ.மீ உயரமுள்ள மயில் வாகனம் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு நபரிடம் இது போன்ற ஆவணமின்றி சிலைகள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

விசாரணையில் மரோமா எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீக ரெட்டியின் மனைவி லாரா ரெட்டி என்பவரிடம் ஒரு சிவகாமி உலோக சிலை, ஆஞ்சநேயர், நாகதேவதை, சிவன் கற்சிலைகள் என 4 சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த சிலைகள் தொடர்பாக போலீசார் லாரா ரெட்டியிடம் விசாரணை நடத்திய போது தங்கள் குடும்பம் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து பணியாற்றியதாகவும், தங்களுடைய மூதாதையர் இந்த சிலைகளை தங்களிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. எனவே இந்த 4 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, இதன் தொன்மை குறித்தும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு  அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ், செய்தியாளர்களை சந்தித்த போது, உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்திருந்தால், அது திருட்டு சிலையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதே போல தங்களுடைய மூதாதையர்கள் வழங்கிய சிலைகள் தொன்மையான சிலைகளா? இல்லையா என்பது குறித்து தெரியாமலேயே வைத்திருப்பவர்கள் அதற்குரிய ஆவணம் இருந்தால் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்து தங்களது பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்தால் உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு : இபிஎஸ் தரப்புக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்!

மேலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடத்திய சிறப்பு ஆய்வில், நேற்று 7 சிலைகளும் இன்று 4 சிலைகளும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

First published:

Tags: Idol smuggling, Tamilnadu police, Villupuram