விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் மாசி பெருவிழா 13 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மாசி பெருவிழா நேற்று (18ம் தேதி) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருக்கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. மாசி பெருவிழாவின் 2ம் நாள் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. தோஷம் நீக்கிய நிகழ்வை நினைவுகூறும் விதமாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நடைபெற்றது. அப்போது மேல்மலையனூர் மயானத்தில் சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அங்காளம்மன் 12 கரங்களுடன் காளியாய் சிம்ம வாகனத்தில் விஸ்வரூபம் எடுத்து காட்சியளித்தார்.
முன்னதாக காலையில் மூலவர் அங்காளம்மனுக்கு புஷ்பம், பன்னீர், இளநீர், சந்தனம் போன்றவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு உற்சவர் அம்மன் காளியம்மன் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். மேலும் மயான கொள்ளையில் கொழுக்கட்டை, பொரிக்கடலை, சிறுதானியங்கள், காய்கறிகள், சாப்பாடு, கருவாடு, பூக்கள் போன்றவற்றை வேண்டுதலுக்காக பக்தர்கள் மயானத்தில் குவியலாக குவித்து பின்னர் பூசாரிகள் மூலவர் சன்னதியில் இருந்து கப்பர மூலம் என்கிற பிரம்மனுடைய தலையை ஏந்தி பூசாரிகள் ஆக்ரோஷத்துடன் சுடுகாடு பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் சுடுகாட்டில் திருக்கோயிலின் சம்பிரதாயப்படி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பூசாரிகள் பக்தர்கள் மீது வாரி இறைத்து கொள்ளையிட்டனர். இந்நிகழ்வின்போது விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை கொட்டுவதும், மேலும் அடுத்தாண்டு மேலும் விளைச்சல் அதிகமாக வேண்டியும் கொள்ளை விடப்பட்ட பொருட்களை கொண்டு சென்று விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக கொண்டுள்ளனர்.
மேலும் புத்திர பாக்கியம் வேண்டுவோர் கொழுக்கட்டைகளை போட்டிபோட்டு எடுத்துச்செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். மயான கொள்ளையில் பக்தர்கள் அங்காளம்மன் காளி மாரியம்மன் என பல்வேறு அம்மன் வேடமணிந்தும், உயிருள்ள கோழிகளை வாயால் கடித்தும் ஆக்ரோஷ நடனமாடியும் கோவிலை வலம் வந்து மயானத்தில் வந்தடைந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த மயான கொள்ளை நிகழ்விற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான புதுவை, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் குவிந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram