கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பெரும் கலவரமும் ஏற்பட்டு தனியார் பள்ளி சூறையாடப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறி தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவி மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய சிபிசிஐடி போலீசாரின் விசாரணை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் மாணவியின் பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோர் மறுத்து வந்தனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபோது மாணவியின் செல்போனை உடனே ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தற்போது நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். மாணவியின் செல்போனை விழுப்புரம் நீதிமன்றம் ஏற்று கொள்ளுமா? அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக ஒப்படைக்க உத்தரவிடப்படுமா என்பது குறித்த தகவல்கள் நீதிபதி நடத்தி வரும் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallakurichi, Local News, Tamilnadu, Villupuram