Home /News /viluppuram /

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்...  நீதிமன்ற ஊழியர்கள் 2 பேருக்கு மெமோ..

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம்...  நீதிமன்ற ஊழியர்கள் 2 பேருக்கு மெமோ..

ஆவணங்கள் மாயம் - நீதிமன்ற ஊழியர்கள் 2 பேருக்கு மெமோ

ஆவணங்கள் மாயம் - நீதிமன்ற ஊழியர்கள் 2 பேருக்கு மெமோ

Viluppuram | பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. ஆவணங்களை திருடியவர்கள் சிக்குவார்களா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்தார்புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது. தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் நிலையில் கடந்த 18ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டு நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார்.

    சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் எஸ்பியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ் அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் மற்றும் சிபிசிஐடி போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்த மூன்று முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன.

    ஆவணங்கள் காணாமல் போனது குறித்து நீதிபதி புஷ்பராணி, நீதிமன்ற ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் மாயமான ஆவணங்களை கண்டுபிடித்து அடுத்த வழக்கு விசாரணைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    Also see... விளாத்திகுளம் அருகே இறந்தவர் உடலை ஊர் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு.. சேற்றிலும், சகதியிலும் தூக்கி சென்று தகனம் செய்த அவலம்

    கடந்த 29ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாயமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் பதிலளித்தனர்.

    இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி புஷ்பராணி, 3 முக்கிய ஆவணங்கள் மாயமானது தொடர்பாக நீதிமன்ற ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கவும், ஆவணங்கள் மாயமானது தொடர்பான தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.



    மேலும் ஆவணங்கள் மாயமானது தொடர்பாக அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், காணாமல் போன ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Sexual harrasment, Villupuram

    அடுத்த செய்தி