விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சங்கீதா (24). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரை சேர்ந்த லாரி ஓட்டுநரான முத்துக்குமரன் என்பவரை காதலித்து தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முத்துக்குமரனை திருமணம் செய்து கொண்ட சங்கீதாவிற்கு தற்போது 5 வயதில் தேவஸ்ரீ என்ற மகளும், 4 வயது லோகேஷ், 1 1/2 வயது தேஷ் ஆகிய இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி வழுதாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தீக்காயங்களுடன் சங்கீதா மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீக்காயம் அடைந்தது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கீதாவிடம் கண்டமங்கலம் போலீசார் மற்றும் வானூர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க : சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது.!
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்று (27ம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடயே தான் உயிரிழப்பதற்கு முன்பாக தனது செல்போனில் சங்கீதா பேசி பதிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா பேசியுள்ள அந்த வீடியோ பதிவில், “அம்மாவிடம் சென்று பணம் வாங்கி வா” என எனது கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததால் மனவேதனை அடைந்து மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றுவது போல நடித்தேன்.
அப்போது எனது கணவர் பின்னால் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி என் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். பிறகு அங்கிருந்த தண்ணீரில் தள்ளிவிட்டுவிட்டார். நான் உண்மையை சொன்னால், “உன்னை தீ வைத்து கொளுத்தியது போல, பசங்களையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன்” என மிரட்டினார்.
இதனால் நான் பயந்து நீதிபதி, போலீசார், டாக்டர், என் வீட்டார் என எல்லோர் கிட்டயும் பொய் சொன்னேன். இது தான் நடந்த உண்மை என கூறியிருந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்தபடியே சங்கீதா பேசி தனது செல்போனில் பதிவிட்ட வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதன் பிறகே காதலித்து கரம்பிடித்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர கணவனின் உண்மை முகம் சுமார் 20 நாட்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ வெளியான பிறகு சங்கீதாவின் கணவரான முத்துகுமரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது உயிரிழந்த சங்கீதாவின் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் சங்கீதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மாலையில் சங்கீதாவின் சொந்த ஊரான ஆசாரங்குப்பம் கிராமத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணப்படுக்கையில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தை கொண்டு சங்கீதாவின் உறவினர்கள் கொலை வழக்காக பதிவு செய்து சங்கீதாவின் கணவர் முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை கண்டமங்கலம் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்யாமல் மெத்தனப் போக்குடன் இருந்து வருவது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சங்கீதாவிற்கு நடந்தைப் போன்ற சம்பவம் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்க கூடாது என்றும், தீ வைத்த சங்கீதாவின் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அனாதையாக்கப்பட்டுள்ள சங்கீதாவின் மூன்று குழந்தைகளுக்கும் அரசு உதவிட வேண்டும் என்றும் சங்கீதாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
வரதட்சணைக் கொடுமையால் தாயும் இன்றி, தந்தையும் கொலை குற்றவாளியாகி மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Vizhupuram