ஹோம் /நியூஸ் /விழுப்புரம் /

’நீங்க செத்து 4 மாசம் ஆச்சு...’ - ஓஏபி பணம் வாங்கச்சென்ற முதியவருக்கு அதிர்ச்சியளித்த அதிகாரிகள்!

’நீங்க செத்து 4 மாசம் ஆச்சு...’ - ஓஏபி பணம் வாங்கச்சென்ற முதியவருக்கு அதிர்ச்சியளித்த அதிகாரிகள்!

சேகர்

சேகர்

Vilupuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வூதிய தொகை கேட்டு விண்ணப்பித்த முதியவர் உயிரோடு இருக்கும்போதே உயிரிழந்துவிட்டதாக அறிக்கை அளித்து நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(63), இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு தனது மனைவி கெங்கம்மாளுடன் தகர கொட்டகை கொண்ட வீட்டில் குடியிருந்து வருகிறார்.

  இரண்டு கறவை மாடுகளை வைத்து பால் கறந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கொண்டு தனது மனைவி கெங்கம்மாளுடன் வாழ்ந்து வருகிறார். ஆதரவற்று வறுமையின் பிடியில் இருந்து வந்த சேகர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு மரக்காணத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்திருந்தார். மேலும், அதற்கான ஒப்புகை சீட்டையும் பெற்றார்.

  அதன்பிறகு மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட துறை அலுவலர்களை நடையாய் நடந்து பலமுறை நேரில் சந்தித்து தனது வறுமை நிலையை எடுத்து கூறி மாதாந்திர ஓய்வூதிய தொகை கிடைக்க வழிவகை செய்து தர வேண்டும் என சேகர் கேட்டு வந்துள்ளார்.

  இதையும் படிங்க : பாழடைந்த வீட்டில் 20 வருடங்களாக வசிக்கும் ஆங்கிலோ-இந்தியன் சகோதரிகள்... சென்னையில் ஓர் மர்மம்?

  அப்போது ஓய்வூதிய தொகைக்கான ஆணை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தருமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் வறுமையின் பிடியில் இருந்த சேகரால் ரூ.5 ஆயிரம் லஞ்சத்தை தர முடியாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரை அலைக்கழித்துள்ளனர்.

  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள சமூக பாதுகாப்பு திட்ட ஊழியர்களிடம் ஓய்வூதிய தொகை கேட்டு தான் விண்ணப்பித்திருந்த மனு குறித்து கேட்டுள்ளார்.

  அப்போது அங்கிருந்த ஊழியர்கள், கணினி மூலம் சரிபார்த்து விண்ணப்பதாரர் சேகர் உயிரிழந்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என சேகரிடமே கூறியுள்ளனர்.

  உயிரோடு இருக்கும் தன்னிடமே உயிரிழந்துவிட்டதாக கூறியதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சேகர் தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரின் துணையுடன் ஓய்வூதிய தொகை கேட்டுதான் கொடுத்திருந்த விண்ணப்பித்ததன் நிலை என்ன என்பது குறித்து ஆன்லைனில் பார்த்துள்ளார்.

  அதில் அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டதில் சேகர் உயிரிழந்துவிட்டதால் அவரின் ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரால் சான்று வழங்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

  உயிரோடு நடமாடி கொண்டிருக்கும் சேகர் உயிரிழந்துவிட்டதாக தாசில்தார் அளித்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து பாதிக்கப்பட்ட சேகர் கூறுகையில், “லஞ்சம் கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் உடனே அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் உடனே சென்றடைகிறது. லஞ்சம் கொடுக்க முடியாத என்னை போன்ற பலரையும் உயிரிழந்துவிட்டதாக கூறி விண்ணப்பங்களை அரசு அதிகாரிகள் நிராகரிப்பு செய்து விடுகின்றனர்.

  என்னுடன் மனு கொடுத்த பலர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால் லஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் உயிரோடு இருந்தும் உயிரற்றவனாக இருக்கிறேன்” என்று வேதனையுடன்  சேகர் தெரிவித்தார்.

  இதையும் படிங்க : Kamal Haasan: ஏர்போர்ட்டில் கமல் ஹாசன்... வைரலாகும் படங்கள்!

  மேலும் சேகரின் மனைவி கெங்கம்மாள் கூறுகையில், “ஓய்வூதிய தொகை வழங்கவிட்டாலும் பிச்சை எடுத்தாவது நாங்கள் வாழ்ந்து கொள்வோம். ஆனால் உயிரோடு இருக்கும் என் கணவனை சாகடித்துவிட்டார்களே” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை ஓய்வூதிய தொகைக்காக உயிரற்றவராக்கி சான்று வழங்கி இருக்கும் மரக்காணம் பகுதி வருவாய் துறை அதிகாரிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

  செய்தியாளர் : குணாநிதி - விழுப்புரம்

  Published by:Karthi K
  First published:

  Tags: Vizhupuram