Home /News /viluppuram /

120 மாணவர்களை பெரம்பால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம்

120 மாணவர்களை பெரம்பால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம்

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்

பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்

Gingee Government school : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசுப் பள்ளியில் 120 மாணவர்களை ஆசிரியர் பெரம்பால் கொடூரமாக தாக்கிய நிலையில், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பள்ளி மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

    செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 12ஆம் வகுப்பு மட்டும் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக நந்தகோபால் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இதனிடையே நேற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் தேர்வு எழுத வைத்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் மூங்கில் பிரம்பை எடுத்து 120 மாணவர்களையும் கொடூரமாக தாக்கி உள்ளார்.

    இதில் மாணவர்களுக்கு முதுகு பகுதி, கை பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று 25 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் கணபதியிடம் இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவரின் முதுகில் காயம்


    பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த செஞ்சி காவல்துறையினர் பெற்றோர்களை சமாதானம் செய்ய முயன்றனர் இருப்பினும் பெற்றோர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செஞ்சி வட்டாட்சியர் நெகருன்னிசா பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    தாக்கப்பட்ட மாணவர்கள்


    அப்போது, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததன் பேரில், பெற்றோர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இருக்கும் தகவலை அறிந்த இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் அங்கிருந்து தலைமறைவானார்.

    Must Read : இந்தியாவில் மீண்டும் விடுதலைப் புலிகள்? - திருச்சியில் என்ஐஏ சோதனையால் பரபரப்பு

    பெற்றோர்கள் முற்றுகை


    இது குறித்து பேசிய பெற்றோர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேரில் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில்,  செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    செய்தியாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gingee, Govt School, School students, Villupuram

    அடுத்த செய்தி