முகப்பு /செய்தி /விழுப்புரம் / சர்ச்சையான விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சிபிசிஐடி சோதனை

சர்ச்சையான விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சிபிசிஐடி சோதனை

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா முன்னிலையில் வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் நேற்று விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக  அன்பு ஜோதி ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக அவரது உறவினர் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆஸ்ரமம் நடைபெற்று வருவதும், ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆஸ்ரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனையடுத்து ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 8 பேர் கெடார் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகி பூதாகரமாகி வருவதால் அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.இதனையடுத்து அன்பு ஜோதி ஆஸ்ரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் சோதனை நடத்தி இதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த தனிப்படை ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணை ஆவணங்களை நேற்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா முன்னிலையில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைத்தனர். அப்போது வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி ஆய்வாளர் ரேவதி பெற்றுக் கொண்டார். விசாரணையை மேற்கொள்வதற்காக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் சிபிசிஐடி எஸ்.பி அருன் பாலகோபாலன் தலைமையிலான அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, மரியா மற்றும் ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் மீது 6 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: