காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் அடுத்த இலுப்பை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ஷேக் மைதீன் (68). இவரது மகன் அபிசூர் ரகுமான் (37) இவரது மகள் மகிரா பானு (35) இருவரும் சிறு வயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அவர்களை வளர்க்க முடியாத அப்துல் காதர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள இல்லத்தில் தங்க வைத்து வளர்த்து வருகிறார்.
சில மாதங்களுக்கு ஒரு முறை மனநலம் பாதிக்கப்பட்ட மகன், மகளை பார்த்துவிட்டு வருவது வழக்கம். அதேபோல் பிப்ரவரி 19ஆம் தேதி மகன், மகளை பார்த்து விட்டு வருவதற்காக அப்துல் காதர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.
அப்போது அவரது போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒருவர், உங்கள் மகன், மகளை உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தால் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அப்துல் காதர் மகன், மகளுக்கு ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அப்துல் காதரும் அவரது மனைவியும் ஏற்கனவே திட்டமிட்டபடி முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்தனர்.
மகன், மகளை ஒரு பெட்டியில் விட்டுவிட்டு வேறொரு பெட்டியிலும் பயணம் செய்ய மனம் இல்லாததால், தங்களுக்கு பதிவு செய்யப்பட்ட கோச்சிலேயே மகன் மகளுடன் பாலக்காட்டில் இருந்து இரவு 9 மணிக்கு பயணம் செய்தனர். ரயில் இரவு 11 மணிக்கு போத்தனூர் வந்ததும் அந்த பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் இவர்கள் இரண்டு பேரும் முன்பதிவில்லாத டிக்கெட் வைத்துள்ளனர். அவர்களை முன்பதிவில்லாத பெட்டிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழி இல்லாத அப்துல் காதர் தனது மகன், மகள் ஆகியோரை கீழே இறக்கி பெண் காவலர் ஒருவரின் உதவியுடன் முன்பதிவு இல்லாத பெட்டியில் இரவு 11 மணிக்கு அமர வைத்து விட்டு வந்துள்ளார். அதிகாலை 4.25 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்ததும் முன்பதிவு இல்லாத பெட்டியில் உட்கார வைத்த மகன், மகள் இருக்கிறார்களா என்று பெயர்களை சொல்லி தந்தை அழைத்துள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை. கூட்ட நெரிசலில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் ரயில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது.
சரி ஒரு வேளை அவர்கள் அதே பெட்டியில் பயணம் செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் அப்துல் காதர் அதே ரயிலில் சென்னை வரை பயணம் செய்தார். ரயில் சென்னை சென்ட்ரலுக்கு சென்றதும் முன்பதிவு இல்லாத பெட்டி முழுவதும் தேடிப் பார்த்தும் மகன், மகள் காணாமல் போனதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்றவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் புகார் செய்ய சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் எங்கே உங்கள் மகன், மகளை எங்கே தேடிப் பார்த்தீர்கள்? எங்கே கிடைக்கவில்லையோ அந்த ஸ்டேஷனுக்கு சென்று புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7 மணிக்கு புகார் கொடுத்தார். போலீசார் இரண்டு பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், அவர்களை மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arakkonam, Train, Train Ticket Reservation