Home /News /trichy /

மதுபோதையில் பெற்ற தந்தையை கொன்று விட்டு நாடகமாடிய மகன்.. இறுதிச்சடங்குக்கு தயாரான போது அதிரடி கைது!

மதுபோதையில் பெற்ற தந்தையை கொன்று விட்டு நாடகமாடிய மகன்.. இறுதிச்சடங்குக்கு தயாரான போது அதிரடி கைது!

பெற்ற தந்தையை கொன்ற மகன்

பெற்ற தந்தையை கொன்ற மகன்

பெற்ற தந்தையை, மகனே கத்தியால் குத்திக் கொன்று விட்டு, ஒன்றும் தெரியாது போல் நாடகமாடிய சம்பவம், திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே சின்னசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 55). ராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறு வயதிலேயே திருச்சிக்கு வந்து, முறுக்குச் சுடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், விஜயகுமார் (வயது 26), வெற்றிச்செல்வன் (வயது 22) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில், திருமணமான விஜயகுமார், பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காயமண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார்.

அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன், அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்றிரவும் வழக்கம்போல குடித்துவிட்டு முருகன் வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது. அவரை விஜயகுமார் சமாதானப்படுத்தி உள்ளார். அதன்பின், நள்ளிரவில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி இருக்கின்றனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். அடிதாங்க முடியாமல் முருகன், வீட்டின் அருகிலுள்ள சந்துக்குள் ஓடியிருக்கிறார்.

ALSO READ | கடப்பாவில் தர்கா சமாதி அசைந்ததாக தகவல்.. வைரலான வீடியோவால் பரபரப்பு

அவரை துரத்திச் சென்ற விஜயகுமார், தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் முருகனின் விலா மற்றும் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். மேலும், அவரின் தலையை பிடித்து சுவற்றில் மோதியிருக்கிறார். சுருண்டு விழுந்த முருகனை விஜயகுமார் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறார்.

வீட்டுக்கு எதிரே ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தனது கத்தியை தூக்கி வீசிவிட்டு, ஒன்றும் தெரியாது போல வீட்டிற்கு சென்று படுத்து தூங்கிவிட்டார். அதிகாலையில் குடும்பத்தினர் முருகனை தேடியபோது, விஜயகுமாரும் அவர்களுடன் சேர்ந்து தேடியுள்ளார். சந்துக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனைவரும் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்த குடும்பத்தினர், அவரது இறுதிச் சடங்குக்கு உண்டான பணிகளை செய்ய துவங்கினர். இவர்களுடன் விஜயகுமாரும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

ALSO READ | ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை.. தமிழக அரசு அறிவிப்பு
 முருகன், குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டு இறந்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், முருகனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விஜயகுமாரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தந்திருக்கிறார். ஆனால், 'போலீஸ் பாணியில்' விசாரித்தபோது நடந்த உண்மையை கூறியிருக்கிறார். அதையடுத்து, விஜயகுமாரை கைது செய்த போலீசார் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Crime News, Trichy

அடுத்த செய்தி