ஹோம் /நியூஸ் /திருச்சி /

ரூ.30,000 தர்றீங்களா.. போலீஸ்-க்கு போகவா - விவசாயியை மிரட்டி லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர் கைது

ரூ.30,000 தர்றீங்களா.. போலீஸ்-க்கு போகவா - விவசாயியை மிரட்டி லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியர் கைது

மணப்பாறை வட்டாட்சியர் கைது

மணப்பாறை வட்டாட்சியர் கைது

Tiruchirappalli | மணப்பாறை அருகே விவசாயியை மிரட்டி லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சுப்ரமணியன் (வயது 59). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மஞ்சம்பட்டியில் சுமார் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்திற்கு அருகில் துவரங்குறிச்சியில் இருந்து செந்துறை செல்லும் சாலை அமைந்துள்ளது.

  இந்த சாலையில் இருந்து இவரது வயல்வழியாகச் செல்லும் மின்சார கம்பியில் இவரது நிலத்தை ஒட்டி வளர்ந்துள்ள புங்க மரத்தின் கிளைகள் மின் கம்பியில் உரசியுள்ளது. இதனால் கடந்த 25 ம்தேதி சுப்பிரமணியன் மரத்தின் கிளைகளை வெட்டி உள்ளார். இதனையறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி, சுப்பிரமணியனை சந்தித்து மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டது குறித்து விசாரித்துவிட்டு, இவரிடம் 30,000 பணம் லஞ்சமாக கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

  கொடுக்கவில்லையென்றால் காவல்துறையில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுகூறி மிரட்டியுள்ளார். இதனால் அரண்டு போன சுப்பிரமணி தாசில்தாரிடம் கெஞ்சியதையடுத்து 10,000 ரூபாயாவது கொடுத்தால்தான் விடுவேன் என கராறாக கூறியுள்ளார்.

  ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன்  வட்டாட்சியர் லட்சுமியின் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணியன் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சுப்பிரமணியன் ரூ.10,000 லஞ்ச பணத்தை தாசில்தார் லட்சுமியிடம் கொடுத்தார்.

  அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியரை கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து வட்டாட்சியரை மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவபரிசோதனையில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  Also see...மனைவியை தோளில் சுமந்து திருப்பதி படியேறிய கணவன்!!

  இதற்கிடையே வட்டாட்சியர் கைது செய்யப்பட்டது குறித்து திருவரங்கம் கோட்டாட்சியர் வைத்தியநாதனுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் அளித்ததையடுத்து மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கோட்டாட்சியரிடம் அலுவலகத்தை ஒப்படைத்தனர். மணப்பாறை அருகே விவசாயியை மிரட்டி லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: ராமன், மணப்பாறை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Manaparai, Trichy, Vigilance officers