திருச்சி கண்டோன்மென்ட் அருகே உள்ள கலைக்காவிரி நுன்கலை கல்லுாரியில் வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் , நேற்று நடைபெற்ற இசையார்ந்த நடன நாடகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார் அவர்கள் மருது சகோதரர்கள் ஆதரவுடனும். ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.
இதைத் தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே , விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை.
சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 1796ம் ஆண்டு இயற்கை எய்தினார். வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை, மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கவைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது.
இந்த நாடக நிகழ்ச்சியில் அறுபது கலைஞர்கள் தோன்ற பதினெட்டாம் நூற்றாண்டைக் கண்முன்னே கொண்டு வரும் காவிய கதைகள் குறித்தும், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் குறித்தும், பிரம்மாண்டமாக அரங்கேறவிருக்கும் தமிழ் மண்ணின் ஈர வீர சரித்திரம் குறித்தும், அந்நியர்களால் மறைக்கப்பட்டு பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றிச் சரித்திரம் குறித்தும் காண்போர் உள்ளம் மகிழும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது.
இசையார்ந்த நாடகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் ஓங்கி ஒலித்த குரல் எங்கள் பூமி , எங்கள் வானம் கப்பம் எதற்கு?, எனக்குக் கூக்குரல் எழுப்பி வெள்ளைக்காரன் பைத்தியம் எனக்கூற ஆம் நாங்கள் பைத்தியம்தான் தன்மானப் பைத்தியம், சுதந்திரப் பைத்தியம் என முழக்கமிட்ட காட்சிகள்,
வெள்ளைக்கார துரை கர்னல் பாஞ்சோ தலைமையில் 300 வீரர்களின் சூழ்ச்சியால் தமிழ் மன்னர் முத்து வடுகநாதர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அடுத்து வேலுநாச்சியை நோக்கி குறிவைக்கின்றான் பாஞ்சோ.
சிவகங்கை மீட்புப் போரில் மாடுமேய்த்த பேரிளம்பெண் உடையாள் வெற்றிவேல் வீரவேல் என முழங்கியவாறு இறந்த காட்சிகள்.
தலைமறைவாக இருந்து 20 மணிநேர உழைப்பு ஒரு வேளை கஞ்சியுடன் மக்கள் துயரம் அடைந்ததைத் தொடர்ந்து முகலாய மன்னர் ஹைதர்அலி உதவியுடன் உடையாள் படை அமைத்து உடன் மருது சகோதரர்கள் பொறுத்ததுபோதும் என முழங்க, வேல் ஈட்டி கம்புகளுடன் வெள்ளையரை விரட்டியடித்து வென்றனர் தமிழர்.
கணவனைக்கொன்ற பாஞ்சோ, காளையார்கோவில் சம்பவம் விவரித்து வேலுநாச்சியார் என்னும் விதவைப் பெண்ணின் வாள் முனையில் தத்தளிக்கிறார். சிவகங்கைக்கு நிரந்தர நிம்மதி தருவதுதான் கடமை என்ற காட்சியும், சுதந்திரமாக வாழ விரும்பும் மக்கள் திருக்குறள் எங்கள் வேதம், புறநானூறு எங்கள் பாடம், உலகம் எமது சுற்றம், உணராதது உன் குற்றம் என்று முழங்கிய வேலுநாச்சி முன், கர்னல் பாஞ்சோ மன்னிப்புக் கோரினார்.
பேராசையால் பாலாகிப்போன சிவகங்கையை சீர்செய் எனக்கூறி மன்னித்து தமிழர் நிலம் தமிழருக்கே என ஏற்றுக் கொண்ட நேரம் கொண்டாட்டம் என தத்ரூபமாக காட்சிகள் வண்ண வண்ண ஒளியில் வசனங்கள் பின்னணியில் உயிரூட்டும் , இசையுடன் நடனம் சேர்ந்து செய்த கலவையாய், மறைக்கப்பட்ட சுதந்திர வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கிவைக்கபட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
Also see... செல்போன் டவரை காணோம்.. ஷாக்கான ஊழியர்கள்
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசையார்ந்த நாட்டிய நாடகநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்திரப்பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், கதிரவன் மற்றும் கலை காவிரி கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு களித்தனர்.
செய்தியாளர்: கோவிந்தராஜ் ( திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.N.Nehru, Minister Anbil Mahesh, Trichy