ஹோம் /நியூஸ் /திருச்சி /

“சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது..”- திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

“சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது..”- திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் போலீசார் சோதனையிடுகின்றனர்

திருச்சி விமான நிலையத்தில் போலீசார் சோதனையிடுகின்றனர்

Trichy Airport Bomb Threaten : திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, 24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் அலைமோதும் இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இதனால், அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பயணிகளை அழைத்து வரும் வாகனங்கள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதியம் 1.46 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், 'விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது' என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.  இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும், விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் போலீசார், மோப்பநாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகள் கொண்டு வெடிகுண்டு உள்ளதா? என்று விமான நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். மேலும், விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து தரப்பினரையும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, விமான நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : விஜயகோபால் - திருச்சி 

First published:

Tags: Local News, Trichy