தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலையின் உதிரி பாகங்களை இறக்கி விட்டு டாரஸ் லாரி ஒன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் லாரி, எதிர் சாலையான திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது, அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு சென்றுகொண்டிருந்த லாரி மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நிகழ்ந்த உடன் டாரஸ் லாரி தீ பற்றி எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அந்த தீ இரண்டு லாரிகளிலும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த பிற வாகன ஓட்டிகள், இது பற்றிய தகவலை துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.
இதற்கிடையில், டாரஸ் லாரியில் இருந்த ஒருவர் உடலில் பற்றி எரியும் நெருப்புடன், தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று, அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததை அடுத்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வந்தது. அந்த இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது, டாரஸ் லாரிக்குள் சிக்கி இருந்த மற்றொருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், கிரேன் உதவியுடன் லாரியில் சிக்கி இருந்தவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும் உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியை சேர்ந்த இந்திர மணிபால் (37) (டாரஸ் லாரி ஓட்டுநர்), உதவியாளர் பவன் பட்டேல் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரின் உடல்களையும் துவரங்குறிச்சி போலீசார் மீட்டு பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Must Read : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி - தனியார் வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் கைது
இந்த விபத்து காரணமாக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டபட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி அம்பிகா, கூடுதல் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். துவரங்குறிச்சி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - ராமன், மணப்பாறை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Fire accident, Manaparai