ஒரு ஊரில் ஒருவர் மூன்றடி ஆழத்திற்கு குழித் தோண்டிக் கொண்டே சென்றாராம். அவரை பின்தொடர்ந்து வந்த நபர் குழியை மூடிக் கொண்டே சென்றாராம். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த ஊர்மக்கள், இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ‘ஒருவருக்கு குழித் தோண்டும் வேலை; மற்றொருவருக்கு அதை மூடும் வேலை. இடையில், மரக்கன்று நடுபவர் இன்று விடுமுறை. அதனால் எங்களது வேலையை மட்டும் சரியாக முடித்து விட்டு செல்கிறோம்’ என்றார்களாம்.
அரசு ஊழியர்கள் வேலை செய்யும் விதம் பற்றி இந்தக் கதையை நகைச்சுவையாக சொல்வதுண்டு. இதேபோன்று ஒரு சம்பவம், திருச்சி திருவானைக்காவலிலும் அரங்கேறி இருக்கிறது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு வரும் பிரதானமான சாலையாக கும்பகோணத்தான் சாலை இருக்கிறது.
இந்த சாலை, திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் இணைகின்ற இடத்தில், போக்குவரத்து காவல்துறை சார்பில், சோலார் பொருத்தப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரியும் கம்பம் ஒன்று நேற்று காலை நட்டு வைக்கப்பட்டது. மாலையில் அந்த கம்பத்தில் இருந்து தண்ணீர், நீருற்று போல பீய்ச்சியடித்தது. போக்குவரத்து கம்பத்தில் எப்படி தண்ணீர் வந்தது? என்று அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
இதைக் கண்டு உற்சாகமடைந்த அப்பகுதி சிறுவர்கள் திடீர் நீருற்றில் குளித்து மகிழ்ந்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் இரவோடு இரவாக அந்த கம்பத்தை அங்கிருந்து பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்காக துளையிட்ட பகுதியில் இருந்து தற்போது தண்ணீர் ஊற்றாக பெருகி, ஆறாக ஓடி, வீணாகி கொண்டிருக்கிறது.
காரணம் என்ன?
போக்குவரத்து சிக்னல் அமைத்த இடத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியை எடுத்து நபர்கள், இதையறியாமல் அங்கு துளையிட்டு போக்குவரத்து சிக்னல் கம்பத்தை நட்டுவிட்டனர். அப்போது குடிநீர் விநியோகம் செய்யும் நேரம் இல்லை என்பதால் அவர்களுக்கு தெரியவில்லை. மாலையில் குடிநீர் வழங்கியபோது, சிக்னல் கம்பத்தின் வழியே தண்ணீர் பீய்ச்சியடித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது அந்த குழாயும் பெயர்த்து எடுக்கப்பட்டு விட்டதால், இன்று அதிகாலையில் இருந்து பலநூறு லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியுள்ளது. போக்குவரத்து சிக்னல் அமைப்பவர்கள், 'இங்கு குடிநீர் குழாய் உள்ளதா?' என்று முன்னதாக கேட்டிருக்க வேண்டும் அல்லது, மாநகராட்சி சார்பில் ‘இங்கு குடிநீர் குழாய் செல்கிறது’ என்ற அறிவிப்பு வைத்திருக்க வேண்டும்.
Must Read : 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தைகள் - குவியும் பாராட்டு!
இரண்டுமே செய்ய தவறியதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவல்துறை- மாநகராட்சி அதிகாரிகள் கலந்து பேசி இப்பணியை செய்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Traffic Police, Trichy, Water