திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்குவாரியில் இளைஞர் ஒருவரை கொலை செய்து உடலை கல்லை கட்டி வீசியிருந்தனர். அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து அவர் கபடி வீரரா என போலீஸார் விசாரித்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர் திருச்சியை சேர்ந்த மாடுபிடி வீரர் என்பது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. தற்போது செயல்பாட்டில் இல்லாத அந்த கல்குவாரியில் இருந்த குட்டையில் இளைஞர் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக குஜிலியம்பாறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்க தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கல்குவாரி குட்டையில் இருந்த சடலம் மீட்கப்பட்டது. இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கல்லால் கட்டி வீசியிருந்தது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கேயம் என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த நபர் கபடி வீரராக இருப்பார் என சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் திருப்பமாக அவர் திருச்சியை சேர்ந்த மாடுபிடி வீரர் மணி என்பது தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்கல் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் நாகலட்சுமி தம்பதியினரின் இரண்டாவது மகன் மணி (வயது 22 ) என்பது தெரியவந்தது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட மணி சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்த கூலி தொழிளியாக பணி செய்து வந்ததாகவும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதில் ஆர்வமுள்ளவரகவும் மாடுபிடிக்க செல்பவராகவும் இருந்து வந்துள்ளார்.
Also Read: பள்ளி மாணவிகளிடம் ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரர் மாரியப்பன் ஆகியோர் எங்கு தேடியும் கிடைக்காததால் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது வேடசந்தூர் அருகே அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சென்று பார்த்தபோது மணி என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
கொலைக்கான காரணம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கல்குவாரியில் கடந்த 10 ஆண்டுகளில் இளம் பெண் உள்பட 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வீசி சென்றுள்ளார்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர். சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரியை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் அல்லது விபத்துகளை தடுக்கும் வகையில் கல் குவாரியை மூட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Dindugal, Jallikattu, Local News, Murder, Tamil News