ஹோம் /நியூஸ் /திருச்சி /

மரண போதைக்கு ஆசைப்பட்டு மரணத்தை தழுவிய இளைஞர் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

மரண போதைக்கு ஆசைப்பட்டு மரணத்தை தழுவிய இளைஞர் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

போதை ஊசியால் பலியான வாலிபர்

போதை ஊசியால் பலியான வாலிபர்

Trichy District | திருச்சியில் உச்சகட்ட போதைக்கு ஆசைப்பட்டு போதை மாத்திரை ஊசியை உடலில் செலுத்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் உச்சகட்ட போதைக்கு ஆசைப்பட்டு  மாத்திரை கரைசல் ஊசியை உடலில் செலுத்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் ஜாவித்(24), கார் டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்  ஆசிக் பாட்ஷா (21). இருவரும் நண்பர்கள்.

மேலும் இவர்களது நண்பர்கள் உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் தென்னூர் உழவர் சந்தை அருகே சம்பவத்தன்று இரவு ஒன்று கூடினர். வழக்கமான மதுபோதை, கஞ்சா போதை இவர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில், போதையின் உச்சத்தை அடைய வேண்டும் என்பதே இவர்கள் அனைவரின் எண்ணமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: பில்டிங் கான்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல்.. பலரை ஏமாற்றிய தில்லாலங்கடி திருநங்கை கைது

இந்நிலையில், போதை ஊசியை போட்டு கொள்வதற்காக, ஒரு மாத்திரை 300 ரூபாய் என மொத்தம் 1,500 ரூபாய் பணத்தை கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளனர். பின்னர், தண்ணீரில் மாத்திரையை கலக்கி, அந்த கரைசலை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர். செலுத்திய சில நிமிடத்தில் ஜாவித், சுருண்டு மயங்கி விழுந்துள்ளார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதை நண்பர்கள், அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஜாவித் மரணம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:

போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கேன்சர் (புற்றுநோய்) நோயாளிகளின்  உடல் வலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையை தான்  இவர்கள் போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த மாத்திரையை தண்ணீரில் கலக்கி அதை ஊசியால் உடலில் செலுத்தி கொண்டால், மனம் அமைதியாகி, உடல் லேசானதை போல தோன்றுமாம்.

தொடர்ந்து, 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை நீடிக்கும் போதைக்காக ஜாவித் உள்ளிட்ட ஐந்து பேரும் தென்னூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் என்பவரிடம் இருந்து, ஒரு மாத்திரை, 300 ரூபாய் கொடுத்து ஐந்து மாத்திரைகள் வாங்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க : பெண்களே உஷார்..! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உண்ணி காய்ச்சல் பரவுது - திருச்சி டீன் எச்சரிக்கை

அனைவரும் ஊசியை செலுத்தி கொண்டபோதும் ஜாவித்துக்கு மட்டும் வலி நிவாரணி மாத்திரை ஊசியால் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போதை மாத்திரை சப்ளையர் ராம்நாத், ஜாவித்தின் நண்பர்கள், ஆசிக், அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தில்லைநகர் 5வது குறுக்கு தெரு அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத்(32), ஆசிக் பாட்ஷா(21) ஆகியோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து ராம்நாத்திடம் இருந்து, 18 போதை மாத்திரைகள், ஒரு போதை மருந்து பாட்டில், ஒரு ஊசி மற்றும், 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போதை ஊசி பயன்படுத்திய அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.

நடவடிக்கை தேவை :

திருச்சி மாநகரத்தை ஒட்டியுள்ள திருவெறும்பூர், காட்டூர், அரியமங்கலம் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் கேன்சர் வலி நிவாரணி மாத்திரைகள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

வெறும், 6 ரூபாய் 40  காசு விலையுள்ள இந்த மாத்திரைகளை மருந்து கடைகளில் இருந்து வாங்கி, தேவைப்படும் இளைஞர்களுக்கு, 300 ரூபாய் வரை ராம்நாத் விற்பனை செய்துள்ளார்.

இவர் மீது ஏற்கனவே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மரண போதைக்காக போதை மாத்திரை ஊசி செலுத்திய இளைஞர் மரணத்தை தழுவிய சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Drug addiction, Local News, Trichy