புகழ்வாய்ந்த சோழ மன்னர்களின் குல தெய்வமாகவும், திருச்சி மாநகரின் காவல் தெய்வமாகவும் விளங்குபவள் உறையூர் வெக்காளியம்மன். வானமே கூரையாக கொண்டு, வெயில், மழை, பனி, காற்று என்று அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களின் தீராவினைகளை தீர்ப்பவள் வெக்காளி. இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
புதிய கருங்கற்களால் ஆன அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம் விமானங்களை பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிவுற்றுள்ளன. அதையடுத்து, சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இதற்காக, கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்று, அய்யாளம்மன் படித்துறையிலிருந்து மேள, தாளங்கள் முழங்க காவிரியிலிருந்து குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கோவில் பூசாரி அமர்ந்து புனிதநீர் குடத்தை கொண்டு வர, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் குடங்களை தலையில் வைத்து சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து, முதல் கால யாகச்சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. 3ம் தேதி இரண்டாம் கால யாகச்சாலை பூஜை தொடங்கி, கணபதி பூஜை, புண்யாஹம், விசேஷசந்தி, அங்குரபூஜை, யாகத்வார மண்டப பூஜை, அக்னிகார்யம், பூஜைகள் நடைபெற்றன.
Also see... உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்...
அன்று மாலை மூன்றாம் கால யாகச்சாலை பூஜைகள் நடந்தன. 4ம் தேதியான நேற்று முன் தினம், நான்காம் கால யாகச்சாலை பூஜையும், அன்று மாலை, நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய ஐம்பூத உருவத்துடன் கூடிய அன்னைக்கு, ஐந்தாம் கால யாகச்சாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது.
நேற்று (5ம் தேதி) காலை ஆறாம் கால யாகச்சாலை பூஜையும், விநாயகர் பூஜை, அங்குர பூஜை, யாகசாலை த்வார மண்டப வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், நவாக்னி பூஜை ஹோமங்கள் நடந்தன.
நேற்று மாலை, ஏழாம் கால யாகச் சாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று (6ம் தேதி) காலை, 4 மணிக்கு எட்டாம் கால யாகச்சாலை பூஜையும், 6 மணிக்கு மகாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 6.20 மணிக்கு யாகச்சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, விமானம், மூலாலாயத்திற்கு வந்து சேர்ந்தடைந்தன.
அதையடுத்து காலை, 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்திகள், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெக்காளியம்மன் மூலாலய மூர்த்தி, விநாயகர் முதலான மூர்த்திகளின் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெறுகின்றன.
Also see... திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள்!
காலை, 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு, 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். விழா ஏற்பாடுகளை, கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, உறையூர் பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.