Home /News /trichy /

திருப்பராய்த்துறையில் பெரியார் சிலை வைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.. கோவில் முன்பு வைக்க பாஜக எதிர்ப்பு

திருப்பராய்த்துறையில் பெரியார் சிலை வைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.. கோவில் முன்பு வைக்க பாஜக எதிர்ப்பு

பெரியார் சிலை

பெரியார் சிலை

திருப்பராய்த்துறை ஊராட்சியில் பெரியார் சிலை அமைப்பதற்கான தீர்மானம் கிராம சிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை கிராமத்தில் பெரியார் சிலை வைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோவில் முன்பு சிலையை வைக்கக் கூடாது என்றும், இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு தினம்தோறும், உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை தாண்டி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலின் முக்கிய அடையாளமாக விளங்கக்கூடியது ராஜகோபுரம்.

இக்கோபுரத்தின் முன்புறம் அமர்ந்த நிலையில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இங்கு, முதலில் நின்ற நிலையில் பெரியார் சிலை வைக்க முயன்றபோது, சிலையின் மீது குங்குமத்தை வீசி, சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கானது விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையே, பிரபல திரைப்பட சண்டை இயக்குனர் கனல் கண்ணன், 'ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்' என்று பேசியதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 75வது சுதந்திர தினவிழாவையொட்டி, திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் தாருகாவனேஸ்வர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவையை சேர்ந்த பிரவீன் என்பவரின் கோரிக்கையினை ஏற்று, திருப்பராய்த்துறை ஊராட்சியில் பெரியார் சிலை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மைதானத்தில் விளையாடுங்கள் செல்போன் வேண்டாம் - மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

கோவில் முன்பு பெரியார் சிலை வைக்கப்படவுள்ளதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து பாஜக இளைஞரணி மாநிலப் பொதுச் செயலாளர் கெளதம் கூறியபோது, "திருப்பராய்த்துறை கோயில் முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.

அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். ஐப்பசி மாதம் முதல் தேதியன்று, கோயில் அருகிலுள்ள காவிரி படித்துறையில் நடைபெறும் 'முதல் முழுக்கு' நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இத்தகைய சிறப்புமிக்க கோயில் முன்பு பெரியார் சிலையை வைத்து, தேவையற்ற சமூக பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, இந்த தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்றார்.

மேலும் படிக்க: ஆர்எஸ்எஸ் கருத்தியலை எதிர்ப்பை சிறிது சமரசம் செய்ய மாட்டேன். - திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை

இதுகுறித்து திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாச மூர்த்தியிடம் கேட்டபோது, "எங்களது ஊராட்சியில் பெரியார் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. ஆனால், கோயில் முன்பு பெரியார் சிலை வைக்கப் போகிறோம் என்பது உண்மை அல்ல. காந்தி சிலை அருகே தான் பெரியார் சிலை வைக்கப் போகிறோம். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் பெரியார் சிலை வைக்காமல் வேறு எப்போது வைப்பது?" என்றார்.

 
Published by:Vijay R
First published:

Tags: Periyar Statue, Trichy

அடுத்த செய்தி