முகப்பு /செய்தி /திருச்சி / 'சிங்கிளா போவேன்.. மொத்தமா சுருட்டுவேன்' - திருச்சியை அதிர வைத்த தனி ஒருவன் கொள்ளையன்!

'சிங்கிளா போவேன்.. மொத்தமா சுருட்டுவேன்' - திருச்சியை அதிர வைத்த தனி ஒருவன் கொள்ளையன்!

கொள்ளையன்

கொள்ளையன்

Trichy arrest | கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீட்டில் இருந்து பல லட்ச ரூபாய், 100க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். தொழிலதிபரான இவரும், இவரது தம்பி நேதாஜியும் இணைந்து, இந்தியா முழுவதும் சாலை உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது வீட்டு விசேஷத்திற்காக கடந்த, 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, 92 சவரன் நகைகள், வைர வளையல் மற்றும் நெக்லஸ் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 5 மணிக்கு காட்டூர் மஞ்சத்திடல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த  காரை வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றதால் அந்த காரை விரட்டிச் சென்றனர். கல்லணை சாலை, வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகே காரை சுற்றி வளைத்த போலீசார் தப்பியோடிய நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த கார்த்திக் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்ததில், அதில், 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார், கொள்ளையனிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர்.

மேலும், தொழிலதிபரிடம் கேட்ட போது இது தங்கள் நகைகள் தான் என தேவேந்திரன் கூறியுள்ளார். இதனையடுத்து விசாரணையில் உண்மையை கூறிய கொள்ளையன், அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 118 சவரன் நகைகள், லேப்டாப், செல்போன், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பற்றி கூறினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து பேசிய திருச்சி சரக டிஐஜி கொள்ளையன் கைது செய்யப்பட்டதாகவும், மீட்கப்பட்ட நகை, பணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையன் தனியாளாக சென்று கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Arrest, Crime News, Local News, Theft, Trichy