Home /News /trichy /

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்டது திருச்சி...

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்டது திருச்சி...

சமயபுரம்

சமயபுரம்

Trichy Samyapuram Mariyamman Koil Temple Maha Kumbabisegam | உலகப் பிரசித்திப்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளதையடுத்து, திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் புதிய ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளதையடுத்து, யாகச்சாலை பூஜைக்காக, ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாகச் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின. எஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றன.

நேற்று காலை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, அக்னி சங்கரஹணம், தீர்த்த சங்கரஹகணமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை, 6.05 மணிக்கு மேல் இரவு, 8.30 மணிக்குள் முதற்கால யாகச்சாலை பூஜைகள் தொடங்கின.
ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகச்சாலை பூஜையில் தருமபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Also see... ஆயிரம் கண்ணுடையாள் எங்கள் சமயபுரம் மாரியம்மன்... பெண்களை தாயை போல காப்பவள்...



இன்று (செவ்வாய்க் கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனத்துடன் இரண்டாம் கால யாகச்சாலை பூஜையும், மாலை, 5.30 மணிக்கு மேல் இரவு, 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாகச்சாலை பூஜையும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை (புதன்கிழமை) அதிகாலை, 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாகச்சாலை பூஜை நடைபெறுகின்றன.

அதைத்தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை காலை, 6.45 மணிக்கு மேல், 7.25 மணிக்குள், ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது.



கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also see... இன்னல்கள் நீங்க.. இன்பங்கள் பெருக.. ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!

மேலும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, சமயபுரம் நால்ரோடு பகுதி முதல், கோயில் வரை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கொரானா தொற்று ஏற்படா வண்ணம் தனியார் மற்றும் அரசு மருத்துவத்துமனைகள் சார்பில், ஆங்காங்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமயபுரம் ராஜகோபுர கும்பாபிஷேகத்தையொட்டி திருச்சி மாவட்டமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Kumbam, Trichy

அடுத்த செய்தி