திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே நெருகேடா பகுதியை சேர்ந்தவர் ரத்தன் (வயது 38), இவரது மகன் ஷங்கர் (வயது 25). இவர்களது உறவினர் ராம் பிரசாத் மற்றும் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் ராமா (வயது 40), ஆகியோர் கடந்தாண்டு ஜூன் மாதம் தங்களது குடும்பத்தினருடன் ரயிலில் திருச்சி வந்துள்ளனர். சாலையோரங்களில் தங்கியபடி பெண்கள் பிச்சையெடுக்க, ஆண்களோ பலூன், பெட்ஷீட் வியாபாரம் செய்வது போல பூட்டிருந்த வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.
ஆட்கள் இல்லாத வீடுகளில் பகலில் கொள்ளையடிப்பது தான் இவர்கள் பாணி. அந்தவகையில், திருச்சி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட உறையூர், கண்ட்டோன்மென்ட், கருமண்டபம் உள்ளிட்ட, 7 வீடுகளில், 254 சவரன் நகைகளும், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும், மதுரை திண்டுக்கல் மாவட்டங்களிலும், 10 கொள்ளை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம், 23ம் தேதி நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களை கஸ்டடி எடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திருடிய நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை, ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் புலியா பஜார் என்ற பகுதியைச் சேர்ந்த, திருட்டு நகைகளை வாங்கும் கன்ஷியாம் என்ற நபரிடம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதனையடுத்து, கண்ட்டோன்மென்ட் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், ஆய்வாளர்கள் சியாமளாதேவி, மோகன், உதவி ஆய்வாளர் உமாசங்கரி மற்றும் காவலர்கள் அடங்கிய, 15 பேர் கொண்ட தனிப்படையினர், காவல்துறை வாகனத்தில் சாலை மார்க்கமாக கொள்ளைப் போன பொருட்களை மீட்கச் சென்றனர்.
ராஜஸ்தானில் உள்ளூர் போலீசார் உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய கன்சியாமிடமிருந்து, 300 கிராம் தங்கத்தையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் கடந்த, 3ம் தேதி பறிமுதல் செய்தனர்.மேலும், திருட்டு நகைகளை வாங்கும் பன்னா லால்- சானியா தம்பதியினரையும் தேடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பன்னா லால் தப்பியோடிவிட்டார். அவரது மனைவி சானியாவை, பினாய் காவல் நிலைய காவலர்கள் உதவியுடன் பிடித்து விசாரித்த போது, அவர், 100 சவரன் நகைகளை திருப்பிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்.
மேலும், புதிதாக வாங்கிய இரண்டு இருசக்கர வாகனங்களையும் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆனால், நேற்று வரை (5ம் தேதி) சானியா நகைகளை திரும்ப தரவில்லை. கஸ்டடியில் எடுத்த ரத்தன், சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் தனிப்படையினர் திருச்சிக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தனர்.
ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு புறப்பட்டுசென்று கொண்டிருந்த போது, சானியாவின் சகோதரர் லக்ஷ்மன் என்பவர், தனிப்படையினரை தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு, தங்க நகைகளுக்கு ஈடாக, 25 லட்ச ரூபாய் கொடுத்து விடுவதாகவும்,அஜ்மீர் வந்து, ரூ.25 லட்சத்தை பெற்றுச் செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர் சியாமளாதேவி ஆகியோர் மட்டும் குற்றவாளிகளை விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, ஆய்வாளர் மோகன் தலைமையிலான தனிப்படையினர், லஷ்மண் கூறிய ரயில்வே நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடம் லஷ்மண், 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் மாநில (ACB -Anti Corruption Bureau) லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், திருச்சி தனிப்படையினரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தனிப்படையினரிடம் விசாரணை நடத்தியபோது தான், 'திருட்டு வழக்கில் இருந்து தனது சகோதரி சானியாவை விடுவிக்க வேண்டும் என்றால், 25 லட்ச ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று தமிழ்நாடு போலீசார் தங்களை மிரட்டுவதாக" லஷ்மன் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ராஜஸ்தான் மாநில டிஜிபியை தொடர்பு கொண்டு பேசினார். கொள்ளையர்கள் குறித்த விபரங்களையும் பட்டியலிட்டுள்ளார். அதையடுத்து தனிப்படையினர் விடுவிக்கப்பட்டனர். தற்போதைய நிலையில், 37 சவரன் நகைகள், 2 லட்ச ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 183 சவரன் நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் சத்தியப் பிரியா, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு பதில், ரொக்கப் பணமாக வாங்குவது வழக்கமான நடைமுறைதான். திருச்சி மாநகரத்தில் கொள்ளைப் போனது, 254 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி. ஆனால் இதில், 300 கிராம் தங்க நகைகளும், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள, 183 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் மீண்டும் ஈடுபடுவோம். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய கென்னடி தலைமையிலான தனிப்படையினர், கொள்ளையரிடம், 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் சிறிதளவும் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.நேக்காக தமிழக போலீசாரை ராஜஸ்தான் போலீசாரிடம் சிக்க வைத்த கொள்ளையனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Police, Theft, Trichy