Home /News /trichy /

அடுத்தடுத்து விழும் கொள்ளிடம் பழைய பாலத் தூண்கள்.. திருச்சி 'நேப்பியர்' பாலத்திற்கு ஆபத்து...

அடுத்தடுத்து விழும் கொள்ளிடம் பழைய பாலத் தூண்கள்.. திருச்சி 'நேப்பியர்' பாலத்திற்கு ஆபத்து...

திருச்சி நேப்பியர் பாலம்

திருச்சி நேப்பியர் பாலம்

Tiruchirappalli | திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பால வடிவில், 88 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் தூண்கள் அடுத்தடுத்து விழுவதால், ஸ்ரீரங்கம் தீவை இணைக்கும் புதிய 'நேப்பியர்' பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி புறநகரத்துடன் ஸ்ரீரங்கம் தீவை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடந்த, 1928ம் ஆண்டு இரும்பினால் ஆன பாலம் ஒன்று ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

நகரத்தை இணைக்கும் பிரதான போக்குவரத்து இப்பாலத்தின் வழியாக நடைபெற்ற நிலையில், 25 ஆண்டுகால தொடர் மண் அரிப்பு காரணமாக பாலம் வலுவிழந்தது.  அதையடுத்து, திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சென்னை நேப்பியர் பால வடிவில், 88 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

போக்குவரத்து நிறுத்தப்பட்ட பழைய பாலம், உரிய பராமரிப்பின்றி போனது. கடந்த, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால், இந்த பாலத்தை தாங்கி நின்ற, 18 மற்றும் 19வது தூண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை உடைந்த பழைய பாலத்தின், 17வது தூண் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், பழைய பாலத்தின், 20வது தூண் வெள்ளநீரில் படிப்படியாக மூழ்க தொடங்கியுள்ளது.

நேப்பியருக்கு' ஆபத்து

ஏற்கனவே விழுந்த பழைய இரும்பு பாலத்தின் தூண்களால், அதனருகே அமைந்துள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியில், 2 முதல், 12 அடி ஆழம் வரை மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், புதிய பாலம் வலுவிழக்கும் நிலைக்கு வந்தது. அதையடுத்து பழைய பாலத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த, 3.10 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.

டெண்டர் விடப்பட்டு, பாலத்தை இடிப்பதற்கான பூமிபூஜை, கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி நடைபெற்றது. இப்பணிகள் இன்னும், 6 மாத காலத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது. புதிய பாலத்தை பலப்படுத்த முதற்கட்டமாக, 6.28 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பழைய பாலம் இடிப்புப்பணி துவங்கவிருந்த நிலையில், மீண்டும்  கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது.

இதனால் புதிய பாலத்தில் அடியில், 40 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் விரைவில் விழ இருக்கும் 20வது தூண் புதிய பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் பழைய பாலத்தை அப்புறப்படுத்த வேண்டும். புதிய பாலத்தை சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்பதே திருச்சி மாநகர மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கலெக்டர் உறுதி

கொள்ளிடம் பழைய பாலம் உடைந்த இடத்தை பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், "தற்போது கொள்ளிடம் ஆற்றில் 1.8 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. தண்ணீர் அளவு குறைந்தவுடன் பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணியும், அதைத்தொடர்ந்து புதிய பாலத்தை பலப்படுத்தும் பணியும் துவங்கும்" என்று தெரிவித்தார்.

Also see... தினந்தோறும் தேசியக்கொடி ஏற்றி நாட்டுப்பற்றை வளர்க்கும் கிராமம்

பாலப்பணி

புதிய பாலத்தை பலப்படுத்தும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறைகளிடம் கேட்டபோது, 'புதிய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள 17வது முதல் 21வது தூண்களின் முன்னும் பின்னும் சில மீட்டர் தூரத்திற்கு சுமார், 300 மீட்டர் நீளத்திற்கு அடித்தளத்தை பலப்படுத்தும் வகையில் சிமெண்ட் படுக்கை (கான்கிரீட் தளம்) அமைக்கப்பட உள்ளது.

எஞ்சிய தூண்களின் பக்கவாட்டில் தேவைக்கேற்ப, 6.5 மீட்டர் ஆழம் முதல், 3 மீட்டர் ஆழம் வரை, பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு புதிய பாலம் பலப்படுத்த உள்ளது' என்று தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Flood, Longest Bridge, Trichy

அடுத்த செய்தி