Home /News /trichy /

மழைக் காலங்களில் இனி சென்னை மிதக்காது - அமைச்சர் கே.என்.நேரு

மழைக் காலங்களில் இனி சென்னை மிதக்காது - அமைச்சர் கே.என்.நேரு

 அமைச்சர் கே.என். நேரு

அமைச்சர் கே.என். நேரு

Minister KN Nehru : சென்னையில் மழைநீர் பாதிப்புகளை தடுக்க, 938 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். மழை வந்த பிறகு எங்களது பணிகள் குறித்து நீங்களே தெரிந்து கொள்ளலாம் - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முனையத்தில், ரூ.20.10 கோடி மதிப்பில், கிராவல் மண் நிரப்பும் பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு, 88 பேட்டரி வாகனங்கள், 3 சிறிய ஜேசிபிகள், 8 புதைவடிகால் தொட்டியில் மண் துகள் அள்ளும் வாகனம் என மொத்தம், ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பிலான புதிய வாகனங்களை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின்னர், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில், அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய முனையத் திட்டத்திற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், ரூ.390 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

30 ஏக்கர் பரப்பளவில் டெர்மினல் மற்றும் பஸ் நிலையப் பணிகள் நடைபெற உள்ளது. இங்கு 404 பஸ்கள் நிற்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.  அது மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில், 10 ,000 பேர் இந்த பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

தெற்கு டெர்மினல் பகுதியில் சரக்கு வாகனங்கள் நிற்கும். மேலும், 28 ஏக்கர் பரப்பளவில் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட் அமைய இருக்கிறது” என்றார்.

மேலும், “ சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய மேம்பாலம் அமைக்கப்படும். தற்போது, பஞ்சப்பூர் பைபாஸ் சாலைக்கு தேவையான நிலங்களை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தி விட்டார்கள். எனவே அந்தப் பணிகளும் விரைவில் நடைபெற இருக்கிறது. மேலும், மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும்வகையில் பெரிய மால் ஒன்றும், அதன் பின்னால் வர்த்தக மையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் தாமதம்:

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை, பாதாள சாக்கடை பணிகள் சற்று தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இன்னும் 15 நாட்களுக்குள், திருச்சி மாநகரில், 75 சதவீத சாலைகள் அமைக்கப்படும். மேலும், 7 பெரிய சாலைகள், ஒரு வார  காலத்திற்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் அனைத்தும் விடப்பட்டு விட்டன.

பெரிய அளவில் தூய்மை பணியாளர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்வதை காட்டிலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களே குப்பைகளை தரம் பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக,  சென்னையில் கருணாநிதி பிறந்த நாளில் மெகா தூய்மை பணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை, 7,200 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய அமைவிடத்தில் மூன்றடி ஆழத்துக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்றப் பணிகள் டெண்டர் கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த டெண்டர் பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடையும். அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு, ஒன்றேகால் ஆண்டுகளில் பஞ்சப்பூர் பஸ் டெர்மினல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பெருங்களத்தூரில் 400 ஏக்கர் நிலத்தை பூங்காவாக மாற்ற திட்டம்:

மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறை நடைமுறையில் உள்ளது. சென்னை பெருங்களத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, 400 ஏக்கர் நிலத்தை பூங்காவாக மாற்ற  திட்டமிட்டுள்ளோம்.

அது மட்டுமல்லாமல் சென்னையில் மரக்கழிவில் இருந்து எரிபொருள் தயாரிப்பது, காய்கறி கழிவிலிருந்து கேஸ் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

Also see... கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது...

பாதாள சாக்கடை இல்லாத பேரூராட்சி பகுதிகளில் கழிவுகளை காய வைத்து உரமாக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஐம்பதாயிரம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வெள்ளநீர் வடிவால் பணிகள்:

சென்னையில் மழைநீர் பாதிப்புகளை தடுக்க, 938 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.
மாநகராட்சியில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை இணைப்பது குறித்து, திருப்புகழ் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளை கொண்டு பணிகளை துரிதமாக செய்து வருகிறோம்.

இப்பணிகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தினமும் கேட்டறிந்து வருகிறார். இனி பழைய நிலை இருக்காது. மழை வந்த பிறகு எங்களது பணிகள் குறித்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

"திமுக அமைச்சர்கள் ஊழல் செய்வதில் தான் ஆர்வமாக இருக்கின்றனர்" என்று திருச்சியில் பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாரே?" என்ற கேள்விக்கு, "அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் ஊழல் குறித்து பேசக்கூடாது" என்றார்.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Heavy rain, KN Nerhu, Monsoon

அடுத்த செய்தி