திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை முசிறி அருகே அமைந்துள்ளது குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில். 'தென் திருப்பதி' என்று போற்றப்படும் இக்கோயில், மன நோயாளிகளுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
ஸ்தல வரலாறு
திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக் கரையில் இருந்த தனது ஆசிரமத்தில் திருப்பதி பெருமாள் எழுந்தருள வேண்டுமென்று தவம் இருந்தார்.
அவரது தவத்தில் மெச்சிய பெருமாள், அவருக்கு காட்சி கொடுத்ததுடன், அவரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் இப்பகுதிக்கு குணசீலம் என்று பெயர் ஏற்பட்டுள்ளது. ஒரு சமயம், குணசீலரின் குருநாதர் தால்பியர் தன்னுடன் இருக்குமாறு அவரை அழைத்ததால், அவர் தனது சீடர் ஒருவரை இங்கே அமர்த்தி, பெருமாளை ஒப்படைத்து, தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்றார்.
அப்போது, குணசீலம் பயங்கரமான காடாக இருந்தது. வனவிலங்குகளும் அதிகமாக இருந்தன. இதற்கு பயந்து போன அந்த சீடர், பெருமாளை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டார்.
காலப்போக்கில் பெருமாளை கரையான் புற்று மூடி மறைத்துவிட்டது.
ஞானவர்மன் என்ற சிற்றரசன் இந்த பகுதியை ஆண்டபொழுது, அரண்மனை பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் போதெல்லாம், பசுக்கள் கொடுக்கின்ற பால் பாத்திரங்களில் இருந்து தானாகவே மறைந்து போனது.
இதுகுறித்த தகவல் அறிந்த மன்னர், குணசீலம் வந்து பார்த்தபோது, கரையான் புற்றில் மறைந்திருந்த பெருமாளை வெளிக்கொண்டு வந்தார். இங்கேயே பெருமாளுக்கு மன்னர் ஒரு சிறிய ஆலயமும் எழுப்பினார் என்பது ஸ்தல வரலாறு.
பன்னிரு கருடசேவை
பொதுவாக, பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால் இந்த கோயிலில் மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று கருட சேவை நடப்பது அபூர்வமான விஷயமாக கருதப்படுகிறது.
மேலும், இங்கு பெருமாள் மட்டுமே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி என்பது தனியாக கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விநோத தேர் திருவிழா
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் போது தேர் முன்னே செல்ல, பக்தர்கள் பின்னே தேரோடிய வீதிகளின் பின்புறம் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள்.
திருமணத்தடை, குழந்தைப் பேறு, மனநலக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் மற்றும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது இங்கு விநோதமான வழக்கமாக இருக்கிறது.
Also see... 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கத்தால் ஜொலித்த ஆந்திரா அம்மன்
பக்தர்கள் கூட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தேர் திருவிழாவில் கோயில் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், தற்போது தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, இன்று, 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவன் தலைமையில், 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தேர்த் திருவிழா காரணமாக குணசீலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Purattasi