மாணவர்கள் சேர்க்கையில், தனியார் பள்ளிகளே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலையில், திருச்சியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று, தொடர்ந்து, 5வது ஆண்டாக, ஒன்றாம் வகுப்பில், 120க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வழக்கமான அரசுப் பள்ளியை போல செயல்பட்டு வந்தது. ஆசிரியர்கள்- பெற்றோர்கள் கூட்டு முயற்சியால் படிப்படியாக அசுர பாய்ச்சலுக்கு தயாரானது. மாநகராட்சி, ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழகம், பொதுமக்கள் கூட்டு முயற்சியால், தனியார் பள்ளிகளை போலவே, ஸ்மார்ட் கிளாஸ், பல்வேறு வண்ணங்களில் பளபளக்கும் வகுப்பறைகளாக மாறின.
அரசு வழங்கும் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களும் இதனுடன் சேர்ந்து கொள்ள, மாணவர்கள் சேர்க்கை சரளமாக உயர்ந்தது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி காரணமாக, மாணவ, மாணவிகள் கல்வி மட்டுமல்லாது, கராத்தே, யோகா, செஸ் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள்
இதன் காரணமாக, கடந்த, 5 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒன்றாம் வகுப்பில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பில், 120 மாணவர்களும், 2ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 60 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இன்னும், 50 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
ALSO READ | திமுக ஆட்சிக்கு வந்தபோது யாரும் ரத்தினக் கம்பளம் விரிக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்காக, காளியம்மன் கோயிலில் இருந்து, தலைக்கீரிடம், மாலை அணிவித்த நிலையில், 'இளவரசர்கள்' போல, 120 மாணவர்களும் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்காக, பள்ளி ஆசிரியைகள், பெற்றோர், தன்னார்வலர்கள் வழங்கிய, 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைகள், நாற்காலிகள், உள்ளிட்ட பொருட்கள் கல்விச்சீராக வழங்கப்பட்டன.
மாணவர் சேர்க்கைக்காக, பல லட்சங்களை செலவு செய்து தனியார் பள்ளிகளே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலையில், திருச்சி மாநகராட்சி பள்ளியில் குவியும் மாணவர் சேர்க்கையை பார்த்து, அனைத்து தரப்பினரும் அசந்து போகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.