"எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், திராவிட மாடல் ஆட்சி தொய்வின்றி வீறுநடை போடும்" என்று திருச்சி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ. 1,042 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கியும் வைத்தார். அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திருச்சியில் மாநாடு உள்ளிட்ட எந்த விழாவானாலும், அது பிரமாண்டமாக தான் இருக்கும். அதனை சிரமேற்கொண்டு செய்பவர் அமைச்சர் கே.என்.நேரு. தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக நிறுவனங்களும் தமிழகத்தை நோக்கி வருகின்றன. புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்த்து வருகிறோம் என தெரிவித்தார்.
*உதயநிதி மீது நம்பிக்கை*
உதயநிதி, இளைஞர் அணி பொறுப்பேற்ற போதும், எம்எல்ஏவாக பதவி ஏற்றபோதும், தற்போது அமைச்சராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வருகின்றன. அதுபோன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு தனது செயல்பாடுகளின் மூலம் விமர்சனங்களை முறியடிக்க வேண்டும். அமைச்சர் உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் துறைகளை அவர் பெற்றுள்ளார். அவர் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழக இளைஞர்கள் ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தமிழகத்தில், 4 ஒலிம்பிக் அகாடமி அமையும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன்.
அதன்படி, திருச்சியில் ஒரு ஒலிம்பிக் அகாடமி அமைகிறது. தமிழகம், உலகத்தோடு போட்டி போடுவதற்கு ஏதுவாக, இந்த ஒலிம்பிக் அகாடமிகள் உதவிக்கரமாக இருக்கும் என கூறினார்.
*சாதனை பயணம்*
இந்தியாவில் மகளிர் சுய உதவிக் குழுவை முதன் முதலில் உருவாக்கப்பட்டது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு, பல நூறு மணி நேரம் நின்றுக் கொண்டே நிதியுதவி வழங்கி உள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்கும், நல்வாழ்வுக்கும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மகளிர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் பொறுப்பாகவும், கடமையாகவும் கருதுகிறோம்.
கடந்த ஓராண்டில், 8,649 கி.மீ., பயணம் செய்துள்ளேன். 647 நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். இதில், 549 அரசு விழாக்கள். 96 கட்சி விழாக்கள். ஓராண்டில், ஒரு கோடியே 74 லட்சத்து 355 பயனாளிகளுக்கு நேரடியாக பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தை செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சியை தொய்வின்றி நடத்தி வருவோம்" என்று பேசினார்.
*விருது வழங்குதல்*
அதன்பின், தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறந்த மகளிர் சுய உதவி குழுவிற்கு, மணிமேகலை விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் பண முடிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்பிய முதல்வர், 'மீதமுள்ள, 2,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல்நிதியை அமைச்சர் உதயநிதி வழங்குவார்' என்று அறிவித்துவிட்டு சென்றார்.
அதன்படி, முதல்வர் சென்ற பிறகு, 2,000 பேருக்கு நிதியுதவிகளை, தொடர்ந்து நின்றபடியே அமைச்சர் உதயநிதி வழங்கினார். அவருடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலர் அமுதா, மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷிணி, எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Local News, MK Stalin, Trichy