ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக அதிமுக போட்டியிடும் என்று திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடைத்தேர்தல்கள் கட்சியின் பலத்தை தீர்மானிப்பதற்கானது அல்ல. தி.மு.க கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி, பலம் வாய்ந்த கட்சியாக, மக்கள் ஆதரவுப் பெற்ற கட்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
எங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி, பெரிய கட்சி அ.தி.மு.கதான் என்றும் இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள் என கூறிய அவர், திமுகவின் தேர்தல் குழுவில் பல அமைச்சர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் என்றும் அதிலிருந்தே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது நன்றாக தெரிகிறது. இவற்றையெல்லாம் எதிர்த்து களம் காண, பலம் வாய்ந்த வேட்பாளராக இருக்க வேண்டும் எங்களுக்குள், எந்தவித குழப்பமும் இல்லை என தெரிவித்தார்.
எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க. ஏற்கனவே அக்கட்சியில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று அமைச்சரான பலர் இருக்கின்றனர். பணப் பலம், படைப் பலம், அதிகாரப் பலம் கொண்ட திமுகவை எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளர் அங்கு நிற்க வேண்டும். அங்கு நிற்கக் கூடிய வேட்பாளருக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்களது கடமை என்றார்.
மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவர் சார்ந்த கட்சியின் மாவட்டத் தலைவரே நிற்பாரா? என்பது சந்தேகம் தான்.
இதனால் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டியதில்லை, அ.தி.மு.க வில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள் ஈரோட்டில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்" என்றார்.
ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிரிந்து இருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டு அணியுமே தங்களது வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இரண்டு தரப்புமே பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, 'அதிமுக வேட்பாளரை நிறுத்துவோம்' என்று சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால், அது ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவா? ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவா? என்பதையும், யார் தற்போது அதிமுக? என்பதையும் அவர் கடைசி வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Bjp state president