தமிழகத்தில், சேலம் துவங்கி, நாகப்பட்டினம் வரை, 12 டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்கும், 25 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமாக காவிரி விளங்குகிறது.
குறுவை சாகுபடிக்காக, ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணை கட்டி முடித்த, 88 ஆண்டுகளில் இதுவரை ஜூன் 12ம் தேதியில், 17 முறையும், ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக, 10 முறையும், காலதாமதமாக, 61 முறையும் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
89வது ஆண்டான இவ்வாண்டு, மே மாதம், 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை நேரில் சென்று திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் உயரம், 120 அடி. மொத்த கொள்ளளவு, 94 டிஎம்சி. கடந்த மாதம், 16ம் தேதியே முழு கொள்ளளவான, 120 அடியை மேட்டூர் அணை எட்டிவிட்டது.
மேலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து அணைக்கு வந்த நீர் முழுவதும் கடந்த, 23 நாட்களாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
உபரி நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில்தான் திருப்பி விடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 120 டி.எம்.சி.,க்கும் அதிகமான தண்ணீர் வரத்து இருந்துள்ளது. அதில், 100 டி.எம்.சி., வரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விட்டு, பத்திரமாக கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவை விட அதிகமான நீர் வீணாக கடலோடு கலந்துள்ளது.
காவிரி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றது குறித்து, தமாகா விவசாயப் பிரிவு பொருளாளர் வயலூர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, "எங்கிருந்து தண்ணீர் வருகிறதோ அந்த இடத்திற்கு மீண்டும் தண்ணீர் போய் சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்று நினைக்கக்கூடாது.
ஒவ்வொரு ஆண்டும் கடலுக்கு இவ்வளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்பது அவசியமான ஒன்று. ஆனாலும் கூட, 100 டிஎம்சி தண்ணீரை அப்படியே கடலுக்கு அனுப்புவது அநியாயம். இந்த தண்ணீரில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீரை திருப்பி, ஏரி, குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும்" என்றார்.
Also see...ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...
மேலும், “ உபரிநீரில் இருந்து, 40 டிஎம்சி தண்ணீர் தேங்கும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட நீர் தேக்கத்தை உருவாக்க ஒரு விரிவான திட்டத்தை தயார் செய்ய வேண்டியது அவசர அவசியமான ஒன்றாக இருக்கிறது. காவிரி உபரிநீரை திருப்பி, வறண்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலான, மேட்டூர்- சரபங்கா, காவிரி- குண்டாறு போன்ற இணைப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Flood, Mettur Dam, Trichy