திருச்சியில், 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள், திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெறுகிறது. சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு, சப் யூத், 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயது வரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை, சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
கடந்த, 24ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற, 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடந்த, 27ம் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என, 3 சுடுதளத்திலும், பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சுட்டார்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு திரண்டதை அடுத்து, மறுநாள் போட்டியில் பங்கேற்காமலேயே, அன்றைய தினம் இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில் மொத்தம், 162 பேர் பதக்கங்களை பெற்றனர்.
இதில் நடிகர் அஜித்குமார், 'சென்டர் பயர் பிஸ்டல்' மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 'ஸ்டாண்டர்டு பிஸ்டல்' மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் 'பிரீ பிஸ்டல்' மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் 'தங்கப்பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல்' மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் 'பிரீ பிஸ்டல்' ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், 'ஸ்டாண்டர்டு பிஸ்டல்' ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என மொத்தம், 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என 6 பதக்கங்களை வென்றார்.
தொடர்ந்து ரைபிள் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பரிசளிப்பு விழா நாளை நடக்க இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Gun shoot, Shooting, Trichy