கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கையில், அத்தியாவசிய பொருட்களுக்கே பொதுமக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக, 80 கோடி ரூபாயில், 40,000 டன் அரிசியும், 28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க, 500 டன் பால்பவுடரும் தமிழக அரசு சார்பில் சென்னை துறைமுகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2ம் கட்டமாக இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் அனைத்தும் சென்னையில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளில், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சங்கிலியாண்டபுரம் சாலையோரத்தில் ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்கள் வீசப்பட்டுள்ளன.
இந்த ஸ்டிக்கர்களில், ஒரு புறம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கோபுர முத்திரையும், மறுபுறம் அசோகச் சக்கரத்துடன் கூடிய சிங்க முத்திரைச் சின்னமும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்திய மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு.. (From People of India To people of Srilanka) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மூவர்ண இந்திய தேசிய கொடியும் பொறிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர்கள், மீதமான ஸ்டிக்கர்களை சாலையோரம் வீசிச் சென்றனரா? அல்லது நிவாரணப் பொருட்களை அபகரிக்கும் நோக்கில், ஸ்டிக்கரை மட்டும் கிழித்து வீசிவிட்டு மூட்டைகள் எடுத்துச் சென்றனரா? என்று தெரியவில்லை.
இலங்கைக்கு சென்ற நிவாரணப் பொருட்களின் ஸ்டிக்கர்கள், திருச்சியில் சாலையோரம் வீசப்பட்டுள்ள சம்பவம் தமிழின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.