இந்து மதம் தொடர்பாக ஆ.ராசா அவருடைய சொந்த கருத்தை பேசவில்லை எனவும் மனுதர்மத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் பேசியிருக்கிறார் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், ம.தி.மு.கவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்டோரும், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் அடுத்த மாதம், 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "தேசிய கல்விக் கொள்கை வந்தால், தமிழ் உட்பட அனைத்து தேசிய இனங்களின் மாநில மொழிகள் அழியும். மத்திய அரசின் நோக்கமே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான்” என கூறினார்.
மேலும், “10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள், நீட் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வயதில் அந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில், 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு மாணவர்ககளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் என்ன நிலை ஏற்படும்? மொத்தத்தில், தேசியக் கல்விக் கொள்கை என்பது குழந்தைகளுக்கான மரண சாசனம்” என்றார்.
வக்பு வாரியம் அறிவித்த அறிவிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட குளறுபடி போன்றவைக்கு ‘ஜி-ஸ்கொயர்’ நிறுவனம் தான் காரணம் என குற்றம் சாட்டிய சீமான், தமிழ்நாடு முழுவதும் உள்ள சொத்துக்களை ஜி ஸ்கொயர் வாங்கி குவிக்கிறார்கள் எனவும் இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும் அவர்களிடம் இருந்து தான் வாங்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆ.ராசா அவருடைய சொந்த கருத்தை பேசவில்லை. மனுதர்மத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் பேசியிருக்கிறார். மனு தர்மத்தின் அடிப்படையில் தான் இங்கு நாட்டில் அனைத்தும் நடக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையே மனு ஸ்மிருதி அடிப்படையில் தான் வகுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஞ்சாலம் பள்ளியில் தீண்டாமை தொடர்வது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தன்னிடம் கேள்வி கேட்கக்கூடாது எனவும் அதை, பெரியார் பூமி, பெரியார் மண், திராவிட மாடல் என்று கூறுபவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் வாசிக்க: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை!
திமுகவை கோட்பாடு அடிப்படையில் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். கோட்பாட்டின் அடிப்படையில் தான் அவர்களோடு் எங்களுக்கு முரண் இருக்கிறது. மற்றபடி, திமுக அத்தியாயம் ஸ்டாலினோடு முடிந்துவிடும் என ஹெச்.ராஜா பேசுவதைப் போல் நாங்கள் பேச விரும்பவில்லை என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manusmriti, New Education Policy, Seeman, Wakf Board