ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ரவுடி உயிரிழப்பு.. 22 பேர் படுகாயம் - வடமாநில இளைஞரை தேடும் போலீஸ்

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ரவுடி உயிரிழப்பு.. 22 பேர் படுகாயம் - வடமாநில இளைஞரை தேடும் போலீஸ்

சிலிண்டர் வெடித்த இடம்

சிலிண்டர் வெடித்த இடம்

Tiruchirappalli | திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவன் உட்பட 22 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள துணிக்கடை முன்பு  இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசம் பகுதியை சேர்ந்த அனார் சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலிண்டர் அருகே நின்ற கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கரட்டான் காடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(35) என்ற மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  மேலும் சம்பவ இடத்தின் அருகே நின்றுக்கொண்டிருந்த வரகனேரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  வரகனேறி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

  மேலும் சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் 7 பெண்கள் 3 குழந்தைகள் 5 ஆண்கள் உட்பட 15 நபர்களும், பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரன்(36), மகேஷ்(21), சிவாஜி(28) உள்ளிட்ட 3 பேரும் , அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சில்வியா(23), பிரியா(22), கவியரசு(26), ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Also see... தமிழ்நாட்டில் 6-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்!

  இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனார் சிங்(31) என்ற வட மாநில பலூன் வியாபாரியை தேடி வருகின்றனர்.

  இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து, விபத்து குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்,

  ”13 வயது பையன் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  22 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  திருச்சி மாவட்டத்தில் இது போன்ற ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி இல்லை. இது போல் யாரேனும் உரிய அனுமதி இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உயிரிழந்த ரவி மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் முற்றிலும் விபத்து மட்டுமே வேறு ஏதேனும் சதி நடைபெறவில்லை” எனக் கூறினார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ், திருச்சி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Death, Gas cylinder blast, Trichy