Home /News /trichy /

தமிழகத்தில் வீரவசனம் பேசிவிட்டு, டெல்லியில் கூழைக் கும்பிடு போடுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சீமான்

தமிழகத்தில் வீரவசனம் பேசிவிட்டு, டெல்லியில் கூழைக் கும்பிடு போடுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சீமான்

சீமான்

சீமான்

Tiruchirappalli | பாஜக ஆளும் மாநிலங்களில் கூட நலத்திட்ட விழாவிற்கு பிரதமரை கூப்பிடுவதில்லை. ஆனால், தமிழக முதல்வர் கூப்பிடுகிறார்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
கடந்த, 2018ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் வந்த போது, அவர்களை வரவேற்க வந்த இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் ம.தி.மு.கவினர் சமரசம் செய்து கொண்டதால், சீமான் உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சி நீதிமன்றத்தில்  விடுதலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: " இலவசங்களால் ஒரு தேசம் எப்போதும் வளராது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். இது மக்களிடம் இருந்து ஓட்டுகளை பறிப்பதற்கான வெற்றுக் கவர்ச்சி திட்டம். கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதையே கடன் வாங்கி படிக்க வேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. வேளாண் குடிமக்கள் கடனாளியாவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து, அதனை நிவர்த்தி செய்யாமல் அவர்களுக்கு கடன் மேல் கடன் வழங்குகிறார்கள்.

இலவசங்களை கொடுப்பதற்கான பணத்தை எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. இலவசங்களை கொடுப்பதை எதிர்க்கும் பாஜக, வேளாண் குடிமக்களுக்கு ஏன், 6 000 ரூபாய் கொடுக்கிறார்கள்?. எனவே இதுவும் ஒரு ஏமாற்று வேலை. வேளாண் குடிமக்கள் கையேந்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?.

பஸ் பாஸ், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாக பெறும் மாணவர்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுதான் கல்வி கற்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களை அரசே தான் ஊக்குவிக்கிறது.
டெல்லி, கர்நாடகா மற்றும் கேரளாவில் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் உயர்ந்துள்ளது. ஆனால், இங்கு தனியார் பள்ளிகள் தரம் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகள் தரம் உயரவில்லை. மற்ற நாடுகளில் அரசு நடத்தும் அனைத்து துறைகளும் நன்றாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் தான் அது நன்றாக இல்லை.

திருடன் தான் தான் திருடிவிட்டு, மற்றவர்களை பார்த்து திருடன்.. திருடன் என்று உரக்க கத்துவார். அதுபோல தான், உண்மையான சங்கி, மற்றவர்களை பார்த்து சங்கி.. சங்கி.. எனக் கூறுகிறார்கள். அந்த வகையில், என்னை பார்த்து சங்கி என்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட நலத்திட்ட விழாவிற்கு பிரதமரை கூப்பிடுவதில்லை. ஆனால், தமிழக முதல்வர் கூப்பிடுகிறார். இங்கே வீரவசனம் பேசிவிட்டு, டில்லி சென்று கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இவர் கலைஞர் மகன் என்பதால் தான் எங்களுக்கு பயமாக இருக்கிறது.

தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அந்த துறை குறித்து அவர் நன்கு அறிந்துக் கொள்ள சில காலம் பிடிக்கலாம். அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவரும் துறையில் ஆர்வமாக செயல்பட வேண்டும்.

பணம் கொடுக்காமல் முதலில், 5,000 பேரை முதல்வர் திரட்டட்டும். அதன் பிறகு கோவையில், 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறிக் கொள்ளட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் திமுகவில் இணைந்தார்கள் என தெரியவில்லை. நமக்கு நாமே திட்டம் என்பது சரிதான். இது அமைச்சர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். ஆனால் மக்களுக்கு நமக்கு நாமமே திட்டம் தான்.

ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பதை விடுத்து, முதல்வர் அவருடைய கருத்து என்ன? என்பதை பொதுமக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது, எட்டு வழிச் சாலை அமைப்பது குறித்தும் தங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடிகர் சரத்குமார் நடிப்பது தவறு. அவர் அதில் நடிக்க கூடாது. சூது எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

லைகா நிறுவனத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனம் முறையாக பணம் செலுத்தி படத்தை வாங்கி அதை வெளியிடுகிறார்கள். ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவர முடியாமல் இருக்கும் பல படங்கள் வெளிவந்துள்ளன.நடிகர் கமலஹாசன்  நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய காரணம் ரெட் ஜெயின் மூவி சார்பில் நடிகர் உதயநிதி செய்த விளம்பர உத்திகளும் காரணம்" என்றார்.

Also see... அதிமுக பொதுக்குழுவை இணைந்து கூட்டுவது நடக்காது - ஈபிஎஸ் தரப்பு வாதம்

"கடந்த திமுக ஆட்சியிலும் இப்படிதான் சினிமாவை ஆக்கிரமித்தார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததே.." என்ற கேள்விக்கு, "அதை தெரிந்து தானே திமுகவுக்கு ஓட்டுகள் செலுத்தி ஜெயிக்க வைத்தீர்கள். சகித்துக் கொள்ளுங்கள். இதை குடித்தால் சாகுவோம் என்று தெரிந்து தானே குடித்தீர்கள். அப்ப செத்து போங்க.." என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: DMK, Naam Tamilar katchi, Online rummy, Seeman, Trichy

அடுத்த செய்தி