திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுக மூத்த அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி நிகழ்வு என்பதால், அவர்கள் இருவரும் தங்களது பள்ளி, கல்லூரி காலத்து நிகழ்வுகளை அசைபோட்டு பேசியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
அவர் பெயர் திலகவதி!
விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியபோது, “நான் படிக்கிற காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள் எல்லாம் கிடையாது. அரசுப் பள்ளிகள் மட்டும் தான். அதுவும், நான் கடந்த, 1964ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது எனது வகுப்பில் மொத்தம், 18 பேர் தான்.
தற்போது, பிளஸ் டூ வகுப்பில், 200, 300 பேர் கூட இருக்கிறார்கள். அந்த, 18 பேரில் ஒரே ஒரு பெண் மட்டும் தான் படித்தார். அந்தப் பெண் பெயர் திலகவதி" என்றார். இதைக்கேட்டு கூட்டத்திலிருந்து பலத்த சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.
உடனே அமைச்சர் பொன்முடி, “எதுக்கு எல்லாம் கை தட்டுறீங்க? என் கூட படிச்சது ஒரே ஒரு பொண்ணு. அந்த பொண்ணு பேரு ஞாபகம் வச்சு சொல்றதுல என்ன தப்பு இருக்கு? அந்த பொண்ணும் வாத்தியார் வீட்டு பொண்ணுங்கிறதால அப்ப படிக்க வச்சாங்க.
உங்களுக்கு இன்னொரு சம்பவமும் சொல்றேன். இது இப்ப உயர்கல்வித்துறை செயலாளராக இருப்பவர் சொன்ன விஷயம். அவர், 1989ம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் எம்எஸ்சி படித்திருக்கிறார். அப்போ அவர் வகுப்பில் மொத்தம் 19 பேர் படித்திருக்கின்றனர். அதில் இவர் ஒரே ஒருத்தர் தான் ஆண்.
அப்ப நினைத்துப் பாருங்கள்.
அனைவரும் சமம் என்ற இந்த ஜமால் முகமது கல்லூரி போல, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஆகியோர் கருதியதால்தான், பெண்கல்வி என்பது இந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது என்றார்.
விடுதிக் கட்டணமும் அல்வாவும்...
நான் படிக்கிற காலத்துல உயர்கல்வி படிக்கிறது ரொம்ப கடினமான விஷயம். நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்தேன். மாதாமாதம் ஹாஸ்டலுக்கு கட்ட வேண்டிய பணம் எனக்கு பெரிய சிரமமான விஷயம்.
இப்ப மாதிரி, 2,000 ரூபாய், 3,000 இல்லை. வெறும், 70 ரூபாய் தான்.
ஆனால் அதை கட்டுவதற்கு அவ்வளவு சிரமமாக இருக்கும். குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை கட்டவில்லை என்றால் மெஸ்ஸில் சாப்பாட்டை நிறுத்தி விடுவாங்க.
அதனால, கட்டணம் கட்டுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே எங்க அப்பாவுக்கு கடிதம் போட்டு, ‘அப்பா எப்படியாச்சும் பீஸை சீக்கிரம் அனுப்பி வச்சுடுப்பா. எனக்கு ரொம்ப சிரமமா இருக்குப்பான்னு’ எழுதுவேன்.
அவர் என்ன செய்வாருன்னா, பீஸ் கட்டுவதற்கு, இரண்டு, மூன்று நாளுக்கு முன்னாடி, அல்வா வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுவாரு. அம்மா கிட்ட போய் அல்வாவை கொடுப்பாரு” என்றார். இதைக்கேட்டு கல்லூரி அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “மரகதம்... மரகதம்...” இதுதான் எங்க அம்மா பேரு. “உன் கழுத்துல இருக்கிற செயினை கொஞ்சம் கொடு. அடகு வச்சிட்டு சீக்கிரமா மீட்டு தந்துடுறேன்” னு சொல்லி, அப்பா செயினை வாங்கிப்பார்.
நகையை அடகு வச்சு எனக்கு பணத்தை அனுப்பி விடுவாரு. அப்படியெல்லாம் நாங்கள் சிரமப்பட்டு படித்த காலம் போய், தற்போது இலவசமாக உயர்கல்வி தருகின்ற வாய்ப்பும், விடுதிக் கட்டணம் இல்லாமல் படிக்கின்ற வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” என்றார் கலகலப்பாக.
நானும் ‘டான்’தான்
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, "நான் படிக்கிற காலத்துல, திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி, நேஷனல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகள் இருந்தன. செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘படிச்சு மாளாதுன்னு’ நான் அங்கே போகலை.
புத்தனாம்பட்டி கல்லூரிக்கும், நேஷனல் கல்லூரிக்கும் போனேன். என்னை பார்த்து அந்த கல்லூரிகளின் பிரின்சிபால் இருவரும் எழுந்து நின்று, ‘உன்னை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும். உனக்கு இங்கே இடம் இல்லை’ என்று சொல்லிவிட்டனர்.
அப்போதே எனக்கு பெரிய மனது வைத்து சீட்டு கொடுத்தது ஜமால் முகமது கல்லூரி தான். சமீபத்தில் டான் என்ற திரைப்படம் பார்த்தேன். அந்த படம் மாதிரி நானும் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் தான்.
ஜாலி ஜமால்...
ஜமால் முகமது கல்லூரியை பொறுத்தவரை வெறும் படிப்பு மட்டுமே இருக்காது. ஜாலியா படிக்க முடியும். அதனாலதான் இந்த கல்லூரியை ‘ஜாலி ஜமால்’ன்னு சொல்லுவாங்க.
கிராமத்துல வசதியான குடும்பம் எங்க குடும்பம். 40, 50 ஏக்கர் நிலம் இருக்கு. அதனால பியூசி படிக்கும் போதே புல்லட்டில் தான் நான் கல்லூரிக்கு வருவேன். எங்க அப்பா என்னை கூப்பிட்டு, ‘தொழிலை கவனிக்க சிரமமா இருக்கு. நீ படிப்பை நிறுத்திட்டு வந்து பாருன்னு’ சொன்னாரு. நானும் சந்தோஷமா படிப்பை பாதியில விட்டுட்டு போயிட்டேன்.
ஆனால், படிக்காததால் நான் இழந்தது ரொம்ப அதிகம். பட்ட அவமானங்கள் அதைவிட அதிகம். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, நீங்க எல்லாரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு என்பதற்காக தான்.
கல்லூரியில் சான்றிதழ்
தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போதெல்லாம் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் நான் வெற்றிப் பெற்றுள்ளேன். இக்கல்லூரியில் படித்து சான்றிதழ் வாங்கியது இல்லை. ஆனால், தேர்தலில் ஜெயித்து இங்கே சான்றிதழ் வாங்கியுள்ளேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அல்வா ரகசியம்
எங்கள் வீட்டில் நிறைய பிள்ளைகள் இல்லை. ஆனால், அமைச்சர் பொன்முடி வீட்டில், 7, 8 பிள்ளைகள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இப்போது தான் தெரிகிறது. ஆண்டுதோறும் அவங்க அப்பா அல்வா வாங்கிட்டு போனால் இப்படி தான் நடக்கும்” என்றார் சிரித்தபடி.
Must Read : பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வசூல்படி உயர்வு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு
சிரிப்பலையும், கரகோஷமும் சில நிமிடங்கள் தொடர்ந்ததால், “வணக்கம்” என்று சொல்லி தனது பேச்சை நிறைவு செய்து அமர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு. இவ்வாறு திமுக மூத்த அமைச்சர்களின் ‘ஆட்டோகிராப்’ பேச்சு பார்வையாளர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்ததோடு, அவர்களையும் தங்களுடைய மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.