தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவக் காலப் பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம், பொதுச் சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வட்டார சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட, 850 சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழக மருத்துவத் துறை வரலாற்றிலேயே வட்டார மருத்துவ அலுவலர்களுடன் நடைபெறும் முதல் மாநில அளவிலான கூட்டம் இது தான். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஏற்கனவே மூன்று துறைகளை இணைத்து நாம் கூட்டங்களை நடத்தி உள்ளோம்.
இருந்தபோதும், 385 வட்டார மருத்துவ அலுவலர்களுடன் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. இவர்கள் தான் மக்களோடு நேரடியாக தொடர்பில் இருக்கக் கூடியவர்கள். இவர்களுடன் பருவக் கால நோய்கள், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.
மருத்துவத் துறையில் உள்ள அனைவரின் உழைப்பால் தான் கொரொனாவின் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து தமிழ்நாடு மீண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில், 96% கொரொனா முதல் தவணை தடுப்பூசியும், 92% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்களிடம், 90 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த, 5 மாதங்களுக்கு மேலாக கொரொனா உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன் H1N1 பாதிப்பு, 300 முதல், 350 ஆக இருந்தது. அது தற்போது படிப்படியாக குறைந்து நேற்றைய நிலவரப்படி, 10 ஆக குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இந்த வைரசுக்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லாமலேயே இந்த வைரசை கட்டுப்படுத்தி உள்ளோம்.
கடந்த, 10 மாதக் காலத்தில் டெங்கு உயிரிழப்பு இரண்டு என்கிற அளவில் தான் உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தான் டெங்கு உயிரிழப்பு அதிகம் நிகழ்ந்தது.
மக்களை தேடி மருத்துவத்தின் மூலம், 93 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
இது, உலகத்திற்கே முன்மாதிரியான திட்டமாக உள்ளது என்று பாராட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், இத்திட்டம் குறித்து சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள மாநாட்டில் என்னை பேச அழைத்துள்ளார்.
நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், ஏதாவது ஒரு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்வேன். அப்போது சரியாக பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவேன்.
அது யாரையும் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மருத்துவத்துறை மிக முக்கியமான துறை என்பதால், அதிகாரிகளும், மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் கூட வேண்டாம் என்று கூறி, தவிர்க்கின்ற ஒரு முதல்வராக, கனிவுடன் செயல்படுகின்ற முதல்வராக நமது முதல்வர் இருக்கிறார்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian, Trichy, Virus