முகப்பு /செய்தி /திருச்சி / ராமஜெயம் கொலை வழக்கு.. சசிகலாவுக்கு சொந்தமான தியேட்டரில் அதிரடி விசாரணை..! திருச்சியில் பரபரப்பு!

ராமஜெயம் கொலை வழக்கு.. சசிகலாவுக்கு சொந்தமான தியேட்டரில் அதிரடி விசாரணை..! திருச்சியில் பரபரப்பு!

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலைவழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது - எஸ்ஐடி எஸ்பி ஜெயக்குமார்.

  • Last Updated :
  • Tamil Nadu | Tiruchirappalli

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்ஐடி) விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தி படுகொலை செய்யப்பட்டார். கல்லணை செல்லும் சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவரது உறவினர்கள், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர், தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள், 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக் கேட்டு, திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் மனு தாக்கல் செய்தனர்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளாத தென்கோவன் தவிர்த்த மீதமுள்ள 12 பேருக்கும் முழு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

நாளை 17ஆம் தேதி தொடங்கி 18, 19 ஆகிய தேதிகளில் 12 பேருக்கும் தனித்தனியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனையிலும், கடலூர் மத்தியச் சிறையில் செந்தில் குமாருக்கு, கடலூர் அரசு மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.

ALSO READ | Exclusive: 'காங்கிரஸ் அல்லது பாஜகவுடனே அமமுக கூட்டணி'... நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய தினகரன்

இதற்கிடையே, திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள காவேரி தியேட்டரில் எஸ்ஐடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது .

நேற்று காலை தொடங்கிய இந்த விசாரணையானது இரவு வரை நீடித்துள்ளது தியேட்டர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

திருச்சி காவேரி தியேட்டர் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த, 2011ம் ஆண்டில் இந்த தியேட்டரை ஜாஸ் சினிமாஸ் வாங்கியதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு சொந்தமான தியேட்டரில் எஸ்ஐடி நடத்திய விசாரணை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் 12 ரவுடிகளும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ள எஸ்ஐடி, மற்றொருபுறம் பல்வேறு பகுதிகளில் விசாரணை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஐடி எஸ்பி ஜெயக்குமார், ராமஜெயம் கொலைவழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. உண்மை கண்டறியும் சோதனை என்பது தொடர்ச்சியான வேலை. எங்களின் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.

செய்தியாளர்: விஜயகோபால், திருச்சி

First published:

Tags: K.N.Nehru, Murder case, V K Sasikala