மோடி பாஜகவின் தலைவர் இல்லை. அதுபோல ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவராக இல்லாவிட்டாலும் அவர் உறுதுணையாக இருந்து வழிநடத்துவார் என செய்தியாளர் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வருகின்ற செப்டம்பர், 7ஆம் தேதி முதல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட, 10 மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.
முன்னதாக, மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியபோது, "இனம், மொழி, ஜாதி என்று பிரித்து பார்க்காமல் மக்களின் நல்லிணக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு, சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கில், 15 லட்ச ரூபாய் பணம் போடுவதாக வாக்குறுதி அளித்தது. தவறான பொருளாதாரக் கொள்கையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி அதிகமாகியுள்ளது.
பொதுமக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதையும், எதை உண்ணக்கூடாது என்பதையும் பாஜக அரசு பட்டியல் செய்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது, மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரிசி, 2 ரூபாய்க்கும், கோதுமை, 1 ரூபாய்க்கும் விநியோகம் செய்தது. அப்படி வழங்கப்பட்ட அரிசி, கோதுமைக்கு, 5% ஜிஎஸ்டி வரியை பாஜக அரசு விதித்திருப்பது கொடுமையானது.
அதே போல், ரயில்வே கட்டணத்தில் ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் உட்பட தமிழகத்திற்கு என்று எந்த பிரத்தியேக ரயில்களும் கொடுக்கப்படவில்லை’ என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், எப்போதும் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறும் போது விஷத்தை கக்கிவிட்டு தான் செல்வார்கள். அதுபோலத்தான் குலாம் நபி ஆசாத்தின் பேச்சும். ராகுல் காந்தியின் நடைப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து துவங்குவதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. கடைக் கோடியிலிருந்து ஆரம்பிப்பதுதான் முறையானது. இலங்கையில் இருந்தோ, வங்காளதேசத்தில் இருந்தோ ஆரம்பிக்க முடியாது’ என கூறினார்.
மேலும், ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் மோடி பாஜகவின் தலைவர் இல்லை. அதேபோல் காந்தியும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருந்தது இல்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்தினார். அதே போல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவராக வருவாரா? வர மாட்டாரா? என்ற விவாதம் தேவையில்ல என்றும் அழகிரி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு என்று கொண்டு வந்த காப்பீடு திட்டம் என்பது படுதோல்வியை சந்தித்துள்ளது. பணக்கார விவசாயிளுக்கு மட்டுமே இந்த காப்பீடு செல்கிறது. அதிலும் குறிப்பிட சில மாநிலங்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. ஏழை விவசாயிகளுக்கு இந்த காப்பீடு திட்டம் சென்றடையவில்லை.
திமுக ஆட்சி செய்து வரும் இந்த ஆண்டு வரை அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டினால் அதையும் சரி செய்து கொள்கிறார்கள்.
சென்னைக்கு கூடுதலாக விமான நிலையம் அவசியம் தான். ஆனால் அது பரந்தூரில் தான் வரவேண்டும் என்று காங்கிரஸ் கூறவில்லை. அப்படி நிலம் கையகப்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 20 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress leader, KS Alagiri, RahulGandhi