ஹோம் /நியூஸ் /திருச்சி /

அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்.. பிரபல ரவுடிகளிடம் விசாரணை

அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்.. பிரபல ரவுடிகளிடம் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

Tiruchirappalli | அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம். இவர் நிலக்கரி சுரங்கங்கள், கல்வி நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களை நடத்தி தொழிலதிபராக வலம் வந்தார்.

திருச்சி மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். கடந்த, 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார்.

அவரின் உடல், திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் திருச்சி மாநகர போலீசார் விசாரித்தனர்.

அதன்பின்னர், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னரும் கொலையாளிகள் கண்டறியப்படவில்லை. அதையடுத்து, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு, 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த எம்எல்ஏ எம்.கே.பாலன் கடத்தி கொலைப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை பிடித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிர்பெறும் வழக்கு

இதன்மூலம், எம்எல்ஏ எம்.கே. பாலன் வழக்கும் தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. அதிமுக சைதைப்பேட்டை எம்எல்ஏவாக இருந்தவர் எம்.கே.பாலன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, திமுகவில் இணைந்து, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த, 2001ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நடைப்பயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது மகன் மணிமாறன் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், பாம் செல்வம், திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் உள்ளிட்ட, 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலனை கடத்திச் சென்று, அடித்துக் கொன்று, எரித்து விட்டதாக தெரிய வந்தது. தற்போது, எம்எல்ஏ பாலன் கொலை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Also see... கணவனை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி சரண்...

வாக்கிங்' கொலை?

சென்னையில் எம்எல்ஏ பாலன் நடைப்பயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டது போலவே, திருச்சியில் ராமஜெயமும் நடைப்பயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த ஒப்புமை அடிப்படையில், திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர் பழைய காவல்நிலையத்தில் வைத்து கடந்த, 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து சில முக்கியமான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்பின்னர் இருவரையும் விடுவித்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், 'எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்து உள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, KN Nerhu, Trichy