ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் (24.11.2022)

திருச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் (24.11.2022)

திருச்சி செய்திகள்

திருச்சி செய்திகள்

Trichy District News : திருச்சி மாவட்டத்தில் இன்று (24. 11.2022) முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்.

  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு :

1) திருச்சியில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 4,931 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 39,448

- பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 103.06க்கும், டீசல் ரூ. 94.69க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2) வானிலை நிலவரத்தைப் பொறுத்தவரை திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையாக 33.7 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக உள்ளது.

3) திருச்சி மலைக்கோட்டை இந்தியன் வங்கி கிளை மேலாளராக திருச்செந்தூரை சேர்ந்த சண்முகராஜா பணிபுரிந்து வந்துள்ளர். இவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து, வங்கியில் இருந்து கடன் வாங்கி, அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, வங்கியில் 'ஆடிட்டிங்' செய்ய குழு வருவதை அறிந்த சண்முகராஜா போலியாக ஆவணங்களை தயார் செய்து 87.50 லட்ச ரூபாய் எடுத்து, மோசடி செய்துள்ளார். சண்முகராஜாவின் பழைய போலி ஆவணக் கடன்களையும், அதை மறைக்க செய்த புதிய போலி ஆவணக் கடன்களையும் ஆடிட்டிங்' அதிகாரிகள் கண்டறிந்து விட்டனர்.

இதையும் படிங்க : உலகக் கோப்பை கால்பந்து தமிழ் வர்ணனை : அசத்தும் திருச்சி இளைஞர்!

இதையடுத்து, திருச்சி இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னையில் தலைமறைவாக இருந்த வங்கி மேலாளர் சண்முகராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

4) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்வில், திருச்சியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் அதிகளவில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இலவச மாதிரித் தேர்வு இன்று நடைபெற்றது.2 மணி 40 நிமிடங்கள் நடைபெற்ற இத்தேர்வில், காவலர் தேர்வுக்கு தயாராகும் 120 பேர் பங்கேற்றனர்.

5) திருச்சி மாவட்டம் துறையூரில் அடுத்தடுத்து இரண்டு நகைக்கடைகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கடைகளில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் விசாரணையில் 15 கிலோ வெள்ளி, 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சில கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்து 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்

6) திருச்சியை சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். பேருந்தில் நேற்று பயணம் செய்யும்போது இவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7) திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் முருங்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜயசேகர். ஊராட்சியின் துணைத் தலைவராக  கருப்பையா  என்பவர் உள்ளார். புனிதா தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கருப்பையா எவ்வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கருப்பையாவுடன் இருப்பவர்கள் புனிதாவை பதவியை விட்டு விரட்டிவிடுவோம் என மிரட்டுதாக கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புனிதா குற்றச்சாட்டுகிறார். இதன்காரணமாக குடிநீர் விநியோகம், மின் பிரச்னை காரணமாக விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜய்சேகர் தலைமையில் அக்கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

8) தா.பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை  உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் காரணமாக இத்துறை சார்ந்த பணிகள் பாதித்தன. தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிடில் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy