Home /News /trichy /

’தனித் தமிழ்நாடு அரசியலே வேண்டாம்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'எஸ்கேப்'

’தனித் தமிழ்நாடு அரசியலே வேண்டாம்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'எஸ்கேப்'

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சரே (மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்) எதிராக இருக்கிறார். அவர் சார்ந்த ஒடிசா மாநிலத்திலும் இதற்கான எதிர்ப்பு இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இலவச பூஸ்டர்

அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியபோது, "பக்ரீத் பண்டிகையையொட்டி, இன்று கொரானா மெகா தடுப்பூசி முகாம்களில் பணியாற்ற வேண்டிய இஸ்லாமிய பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரானா தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு குறைந்த காரணத்தால், தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், தற்போது முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சேவை வரி இல்லாமல் குறைந்த விலையில் செலுத்தப்படுகிறது. விரைவில், பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் நிலை வரும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

கருப்பு பட்டியல்

கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஹெல்த் மிக்ஸ் விவகாரம், டெண்டர் விட்டு முடிந்துவிட்டது. டெண்டர் எடுத்துள்ள நிறுவனம் மீது எவ்வித குற்றச்சாட்டும் எழாத நிலையில் எதற்கு அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்?

யாராவது குறை கூறியிருந்தால் பரவாயில்லை. அதே நிறுவனம் வழங்கிய பொங்கல் தொகுப்பில் நீங்கள் என்ன குறையை கண்டீர்கள்?

நீட் தேர்வு

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சரே (மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்) எதிராக இருக்கிறார். அவர் சார்ந்த ஒடிசா மாநிலத்திலும் இதற்கான எதிர்ப்பு இருக்கிறதாம்.

நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்மேல், ஜனாதிபதியும், உள்துறை அமைச்சகமும் எடுக்கும் முடிவுகளை பொறுத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

சாலை விபத்துகளில் காயம் அடைவோர்களுக்கு முதல், 48 மணி நேரத்திற்கு கட்டணமின்றி  சிகிச்சை அளிக்கும் வகையில், 688 மருத்துவமனைகளில், கடந்த ஆண்டு டிசம்பர், 19ம் தேதி  'இன்னுயிர்  காப்போம்' திட்டத்தை முதல்வர் துவக்கினார்.

இத்திட்டம் மூலம் இதுவரை ஏற்பட்ட, 89,605 விபத்துகளில் சிக்கியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 80.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு நம்மிடம் கேட்கும் வகையில் முன்னோடி திட்டமாக இத்திட்டம் இருக்கிறது" என்றார்.

அரசியல் வேண்டாம் 

"தனித் தமிழ்நாடு கோஷம் மீண்டும் எழுந்துள்ளதே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தனித் தமிழ்நாடு அரசியலே வேண்டாம்" என்று பதில் சொல்வதை தவிர்த்து விட்டார்.

 
Published by:Esakki Raja
First published:

Tags: Ma subramanian

அடுத்த செய்தி