ஹோம் /நியூஸ் /திருச்சி /

சாதா நேரத்துல கட்டில்... மழை நேரத்துல படகு: தண்ணீரில் மிதக்கும் 'Fure Boat' - திருச்சி என்ஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

சாதா நேரத்துல கட்டில்... மழை நேரத்துல படகு: தண்ணீரில் மிதக்கும் 'Fure Boat' - திருச்சி என்ஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

மிதக்கும் கட்டில்

மிதக்கும் கட்டில்

Fure Boat | சென்னை பெரு வெள்ளம் உட்பட மழை வெள்ளக் காலங்களில், வீட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் இருக்கும் தனது தாயை எப்படி காப்பாற்றுவது? என்று இவருக்கு அடிக்கடி யோசனை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

வீட்டில் கட்டிலாகவும், பீரோவாகவும், பெஞ்சாகவும் பயன்படுத்தும் பொருளை வைத்து, மழை வெள்ளத்தில் இருந்து மக்கள் உயிர் தப்பிக்கலாம் என்ற அரிய கண்டிப்பை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார் திருச்சி என்ஐடி பேராசிரியர் ஒருவர்.

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) உலோகவியல் மற்றும் மூலப்பொருட்கள் இயல்துறை புலத் தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் முத்துக்குமரன்.

சென்னை பெரு வெள்ளம் உட்பட மழை வெள்ளக் காலங்களில், வீட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் இருக்கும் தனது தாயை எப்படி காப்பாற்றுவது? என்று இவருக்கு அடிக்கடி யோசனை எழுந்துள்ளது.

அதுவும் தனது துறை சார்ந்த, ஒரு அரிய கண்டுபிடிப்பை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதே அவரது ஆய்வின் அடிநாதமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க : மழைக்கு நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலி.. வடகிழக்கு பருவமழை அப்டேட்..

அதனடிப்படையில், ஒன்றரை ஆண்டுக்காலங்கள் செலவிட்டு, உறங்க நினைத்தால் கட்டிலாகவும், உட்கார நினைத்தால் பெஞ்சாகவும், நிற்க வைத்தால் பீரோவாகவும், மழை வெள்ளத்தில் படகாகவும் பயன்படுத்தும் விதத்திலான, 'Fure Boat' என்ற மிதவையை கண்டறிந்துள்ளார்.

அதாவது, 'Fur' -பர்னிச்சர்- வீட்டு உபயோகப் பொருள், 'e' - Emergency- அவசரக்காலம், Boat - படகு என்ற அடிப்படையில், 'Fure Boat' என்ற ஒரு மிதவையை தயாரித்துள்ளார்.

50 படகு இலவசம் : 

இதுகுறித்து பேராசிரியர் முத்துக்குமரன் பேசுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த மிதவைக்கான காப்புரிமையை பதிவு செய்தேன். இதற்கான  ஆராய்ச்சியின்போது, 'Fureboat' அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அத்தகைய விபத்துக்களை தவிர்ப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, எஃகு மற்றும் பாலிமர் மேட்ரிக்ஸ் கலவைகள் கொண்டு தயாரித்தேன். தற்போது மிதக்கும் போது நிலைத்தன்மையாக இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள், செல்லப் பிராணிகளை 'Fureboat'ல் இணைக்கப்பட்டுள்ள துடுப்பினை பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் திசைகளில் பயணிக்க முடியும்.

அல்லது நீச்சல் தெரிந்த வலிமையான நபர்களின் உதவியுடன் 'Fureboat' யை தாங்கள் விரும்பும் திசையில் கயிற்றால் இழுத்துச் செல்லவும் முடியும். இன்னும் எடை குறைவான, வேகமான வெள்ளநீரோட்டத்திலும் பயணிக்கக் கூடிய 'Fureboat'யை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

மனித உழைப்பு மூலம் ஒரு மிதவை செய்ய, 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தொழிற்சாலைகள் மூலம் அதிகளவு தயாரிக்கும் போது விலை இன்னும் குறையும். முதற்கட்டமாக, வெள்ள அபாய பகுதிகளில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், பள்ளிகளின் பாதுகாப்பிற்காக, எனது சொந்த செலவில், 50 படகுகளை தயாரித்து அனுப்பி வைக்கவிருக்கிறேன்" என்றார்.

மத்திய அமைச்சர் உறுதி :

இவரின் 'Fure Boat' கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டிய என்ஐடி இயக்குனர் அகிலா, இவரின் கண்டுபிடிப்பு குறித்து, திருச்சி என்ஐடியில் ஆய்வுக்கு வந்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்காரிடம் தெரிவித்தார்.

மேலும், இதன் பயன்பாடு குறித்த செய்முறை விளக்கத்தினை நேரில் கண்டு வியந்துப்போன  மத்திய இணையமைச்சர், 'திருச்சி என்ஐடியின் கண்டுபிடிப்பை, நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கப்போவதாக' உறுதியளித்து சென்றுள்ளார்.

இதையும் படிங்க : மழைநாள் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Heavy rain, New invention, Trichy